தமிழகம் Covid-19

கால்கள் இல்லாத தனது தாயை 230 கிலோமீட்டர் தோளில் சுமந்து வந்த மகன்..! நெஞ்சை உருக்கும் சம்பவம்.!

Summary:

Son lift his differently abled mother for 230 kilo meters due to lockdown

மாற்று திறனாளியான தனது தாயை 18 வயது மகன் 230 கிலோமீட்டர் தோளில் தூக்கி செல்ல முயற்சித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 வரை அமலில் இருப்பதால் அனைத்துவிதமான போக்குவரத்துகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பிழைப்பு தேடி வேறு இடங்களுக்கு சென்றுவார்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பவும் முடியாமல், உணவும் இல்லாமல் தவித்துவருகின்றனர். இதனிடையே கள்ளக்குறிச்சியில் இருந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊஞ்சலார் என்ற கிராமத்திற்கு மஞ்சள் அறுவடைக்காக சென்ற விவசாய குழு ஊரடங்கு காரணமாக அங்கேயே தங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் வேலையில்லாமல் அந்த கிராமத்திலேயே அவர்கள் தங்கியிருந்த நிலையில் அன்றாட உணவிற்கே மிகவும் சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் 15 பேர் கொண்ட இந்த விவசாய குழு வேறு வழி இல்லாமல் தங்களின் சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவெடுத்தார்கள்.

அறுவடைக்காக வந்த இந்த குழுவில் அவர்களுக்கு சமையல் செய்வதற்காக ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணும் வந்துள்ளார். இவரை எப்படி கூடிச்செல்வது என அனைவரும் யோசித்தநிலையில்,  அவரது மகன் தனது தாயை தனது தோளில் தூக்கி செல்ல முடிவெடுத்தார்.

இதனை அடுத்து மாற்றுத்திறனாளியான தனது தாயாரை அவரது 18 வயது மகனே தனது தோளில் சுமந்து சுமார் 230 கிலோ மீட்டர் நடை பயணத்தை மேற்கொண்டார். பரமத்திவேலூரில் உள்ள கொத்தனூர் வாய்க்கால் அருகே 15 பேர் கொண்ட விவசாய குழு செல்வதை அறிந்த பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையை அடுத்து அவர்களுக்கு சாப்பாடு வழங்கி அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வாகனம் ஏற்பாடு செய்துகொடுத்துள்ளனர். சற்றும் யோசிக்காமல் தனது தாயாரை மகன் 230 கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்துசெல்ல துணிந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement