தமிழகம்

குடிக்கு அடிமையான மகன்.! தாய் என்று கூட பார்க்காமல் மகன் செய்த வெறிச்செயல்.!

Summary:

மதுகுடிப்பதற்கு பணம் தராத தாயை, மகன் இரும்பு குழாயால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஆதியம்மாள்(65). இவருக்கு மகேஷ்குமார் (38), சதீஷ் (35) என 2 மகன்கள் உள்ளனர். வீட்டின் மாடியில் உள்ள குடிசை வீட்டில் ஆதியம்மாள் தனியாக வசித்து வந்தார். கீழே உள்ள வீட்டில் அவரது மகன் மகேஷ்குமார் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று ஆதியம்மாள் வீட்டில் இருந்து  நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் மாடியில் உள்ள குடிசை வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு ஆதியம்மாள் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்த ஆதியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ஆதியம்மாளின் மகன் மகேஸ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் பெற்ற தாயை அடித்துக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. மகேஷ்குமாருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்துவந்த இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனால் தினமும் மது அருந்திவிட்டு தாயுடன் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். 

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த அவர், குடிப்பதற்கு தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். மதுகுடிக்க பணம் தராததால் ஆத்திரமடைந்த மகேஷ்குமார் வீட்டில் இருந்த இரும்பு குழாயை எடுத்து தாயின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மகேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.


Advertisement