பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் புகாரில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா தப்பியோட்டம்.!

பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் புகாரில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா தப்பியோட்டம்.!


shivasankar baba escaped from hospital

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ ராமராஜ்யா என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. 72 வயதான இவர், கடந்த 20 ஆண்டுகளாக கேளம்பாகத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருகிறார். இவர் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன், காவல் ஆய்வாளர் ஜெயசங்கர் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனையடுத்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

shivasankar baba

இந்தநிலையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிக்கியுள்ள சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனை தொடர்ந்து சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படை போலீசார் நேற்று டேராடூன் விரைந்தனர். ஆனால், இன்று காலை சிபிசிஐடி போலீசார் டேராடூனில் உள்ள அந்த குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்றபோது சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது. சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்கு எங்கும் தப்பிச்செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி போலீசார் நேற்று லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.