திருநெல்வேலி சாந்தி ஸ்வீட்ஸ் கடை அல்வா பொட்டலத்தில் தேள்! கடையில் அதிரடி ஆய்வு! திருநெல்வேலியில் பரபரப்பு..

திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள பிரபலமான சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் வாங்கிய அல்வா பொட்டலத்தில் தேள் இருந்ததாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கீழஅழகுநாச்சியார்புரத்தைச் சேர்ந்த சுகந்தன்பு என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.இது தற்போது சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 13 அன்று அவர் நான்கு கால் கிலோ மற்றும் அரை கிலோ அல்வா வாங்கி வீட்டுக்குச் சென்றபோது, ஒரு பொட்டலை திறந்த போது அதில் தேள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு, சாந்தி ஸ்வீட்ஸ் உரிமையாளர் விளக்கம் தர வேண்டும், இல்லையெனில் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கடற்கரையில் ஒதுங்கிய 150 கிலோ எடையுள்ள மிகப்பெரிய டால்பின்! அதன் நிலைமையை பார்த்து மக்கள் அதிர்ச்சி..
இந்த வீடியோ பலர் மத்தியில் பகிரப்பட்டதால், சாந்தி ஸ்வீட்ஸ் கடையின் தரம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில், அசல் சாந்தி ஸ்வீட்ஸ் உரிமையாளர் சிவசுப்பிரமணியன் கூறியதாவது: “அல்வா கவர் எங்களுடையதுதான், ஆனால் எங்கள் தயாரிப்புகளில் இப்படி தேள் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. திருநெல்வேலியில் சாந்தி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் பல கடைகள் செயல்படுகின்றன. இந்த வீடியோ எங்கள் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கலாம். காவல்துறையில் புகார் அளிக்க உள்ளேன்” என்றார்.
இதன் உண்மை தன்மை குறித்து அதிகாரிகள் தற்போது அந்தக் கடையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.