மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
சலூன் கடைகள், பியூட்டி பார்லர்களுக்கு அனுமதி இல்லை! எந்த கடைகளுக்கு அனுமதி?

சீனாவின் உகான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸின் பரவல் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை, மூன்றாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில், மே 2-ந்தேதி அன்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின் படியும், பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. இந்தநிலையில் மேலும் பல கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டீக்கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள் திறக்கப்படலாம் எனவும், ஆனால் பார்சல் மட்டுமே வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தபட்டுள்ளது.
அதேபோல், கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள், மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள். செல்போன் விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள், கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள், மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள், கண் கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள், ஊரகப் பகுதிகளில் உள்ள சிறிய நகைக் கடைகள், சிறிய ஜவுளிக் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்படுத்தலாம் எனவும், மிக்சி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள், டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள், பெட்டி கடைகள், பர்னிச்சர் கடைகள். சாலையோர தள்ளுவண்டி கடைகள், நாட்டு மருந்து விற்பனை கடைகள், விவசாய இடுபொருட்கள் போன்றவை விற்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடி திருத்தும் நிலையங்கள்(சலூன்கள்), ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்கள் இயங்கக் கூடாது என்று தெரிவிக்கப்படுகின்றது. மேலும், ஊரடங்கு தளர்வின்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகள், கடைகள் தொடர்ந்து இயங்கும். மேலும் கொரோனா நோய்த் தொற்று தன்மையைப் பொறுத்து வருங்காலங்களில் பல்வேறு பணிகளுக்கு, கடைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் எனவும், பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.