கட்டிய தாலியில் ஈரம் கூட காயல.. ஹெல்மெட் இரண்டாக பிளந்து போலீஸ்காரர் மரணம்.. திருமணமான 20 நாளில் ஏற்பட்ட பரிதாபம்!



Police man dead after 20 days of marriage near Trichy

திருமணம் முடிந்து 20 நாட்களில் காவலர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். மணிகண்டம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்துவந்தார். இந்நிலையில் ரஞ்சித்குமார் நேற்று இரவு பணிமுடிந்து தனது இருசக்கர வாகனம் மூலம் வீட்டிற்கு சென்றுள்ளார். லால்குடி சாலையில் தாளக்குடி அருகே உள்ள அகிலாண்டபுரம் என்ற பகுதியில் அவர் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது மினி வேன்  ஒன்று குறுக்கே வந்துள்ளது.

இதனால் மினி வேன் மீது மோதாமல் இருக்க ரஞ்சித்குமார் பிரேக் புடித்துள்ளார். ஆனால் வாகனம் நிற்காமல் நேராக சென்று வேன் மீது மோதியுள்ளது. மோதிய வேகத்தில் மினி வேனும் கவிழ, இதில் துாக்கி வீசப்பட்ட ரஞ்சித்குமார் அருகே இருந்த இரும்பு கம்பு ஒன்றில் மோதியுள்ளார்.

கம்பியில் மோதிய வேகத்தில் ரஞ்சித்குமார் அணிந்திருந்த ஹெல்மெட் இரண்டாக உடைந்து, அவரது தலை கம்பியில் மோதியுள்ளது. இந்த விபத்தில் ரஞ்சித்குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட, உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ரஞ்சித்குமாரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். விபத்தில் உயிரிழந்த காவலர் ரஞ்சித்துக்கு திருமணம் முடிந்து 20 நாட்களே ஆன நிலையில், அவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.