தமிழகம்

மருத்துவமனைக்குள் புகுந்து சிகிச்சையில் இருந்தவரை வெட்டிப் படுகொலை! பதறிப்போன மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்!

Summary:

patient murdered in hospital

மதுரையில் பழிக்குபழி சம்பவமாக அரசு மருத்துவமனைக்குள் புகுந்து சிகிச்சையில் இருந்தவரை 4 பேர் கும்பல் அதிகாலையில் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை கரும்பாலை பி.டி.காலனி பகுதியை சேர்ந்தவர், முருகன். 40 வயது நிரம்பிய இவர் கூலி தொழிலாளியாக இருந்துள்ளார். இவர் மீது மதுரை நகரின் பல காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

முருகனுக்கு சிறுநீரகக் கோளாறு, நரம்புத் தளர்ச்சி காரணமாக கடந்த 5-ம் தேதி மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவருடன் மேலும் சிலரும் அந்த வார்டில் சிகிச்சையில் இருந்தனர்.

இந்தநிலையில், நேற்று அதிகாலையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கும்பல், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களை மருத்துவமனை வளாகத்தில் வெளிப்பகுதியில் நிறுத்திவிட்டு முருகன் சிகிச்சைபெறும் வார்டை நோக்கி அவர்களது கைகளில் கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு வந்துள்ளனர்.

முருகனின் படுக்கைக்கு சென்ற அவர்கள் திடீரென அரிவாள்களால் சரமாரியாக முருகனை வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த முருகன் உயிரிழந்தார். இச்சம்பவத்தால் வார்டில் இருந்த 20-க்கும் மேற்பட்ட நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். 

இச்சம்பவம் குறித்து வார்டு காவலாளி போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த ஓராண்டுக்கு முன், வைகை ஆற்றுக்குள் கஞ்சா வியாபாரி ஒருவரின் கொலையில் தொடர்புடையவர் முருகன் என்பதும், இதன்காரணமாக பழிக்குப் பழியாக முருகனை கொலை செய்திருக்கலாம் எனவும் தெரியவந்தது.


Advertisement