துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்துக்கு இழப்பீடு அறிவித்த முதலமைச்சர்.!

துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்துக்கு இழப்பீடு அறிவித்த முதலமைச்சர்.!



MK stalin announces compensation for young boy death


துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே  பசுமலைப்பட்டி கிராமத்தில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. மலைகள், பாறைகள் நிறைந்த பகுதியில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 30ம் தேதி  மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது சி.ஐ.எஸ்.எப் வீரர் ஒருவர் துப்பாக்கிச்சூடு பயிற்சி எடுத்தபோது, அவரது துப்பாக்கியில் இருந்து வந்த குண்டு நார்த்தாமலையில் உள்ள ஒரு குடிசை வீட்டின் வாசலில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த புகழேந்தி என்ற 11 வயது சிறுவனின் தலையில் எதிர்பாரதவிதமாக பாய்ந்தது.

இதனால் சிறுவன் மயக்கமடைந்து விழுந்தான். இதனையடுத்து குண்டடிபட்ட சிறுவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில் சிறுவன் உயிரிழந்ததால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்த சிறுவனுக்கு ஞாயம் கிடைக்க வேண்டும். மேலும் சிறுவனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.