ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக வீரர்கள் 11 பேர் தேர்வானது வரலாற்று சாதனை.! அமைச்சர் மெய்யநாதன்

ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக வீரர்கள் 11 பேர் தேர்வானது வரலாற்று சாதனை.! அமைச்சர் மெய்யநாதன்



minister-meiyanathan-visit-thanjavur-stadium

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான மெய்யநாதன் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்றிருந்தார். தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் செயற்கை இழை ஒடுதளம் மற்றும் மின் விளக்கு வசதிகள் ரூ.6 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது மின்விளக்குகள் அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது. இந்தநிலையில், செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதை அமைச்சர் மெய்யநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், தமிழகத்தில் உள்ள விளையாட்டு மைதானங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கிராமப்புறங்களில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 11 வீரர்கள் தேர்வாகி இருப்பது வரலாற்று சாதனை. போட்டியில் பங்கேற்கும் தடகள வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த தொகை விரைவில் வழங்கப்படும். 11 வீரர்களும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.