மதுரை திண்டுக்கல்லில் மைக்கை திருடி கிராமங்களில் விற்ற... கில்லாடி திருடன் கைது...!Madurai Dindigul stole the mic and sold it in the villages...killed thief arrested.

திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் 16  மோட்டார் சைக்கிளை திருடி, கிராமங்களில் விற்ற திருடனை காவல்துறையினர் கைது செய்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியை அடுத்த பூவகிழவன்பட்டியை வசித்து வருபவர் ராசு. விவசாயியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க பைக்கில் சென்றுள்ளார். ஆஸ்பத்திரி வளாகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உறவினரை பார்க்க சென்றபோது அவரது மோட்டார் சைக்கிள் திருடு போனது. அதேபோல் திண்டுக்கல் கோபால் நகரில் வசித்து வரும் சின்னு, மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த மெக்கானிக் பாலசுப்பிரமணி ஆகியோரின் மோட்டார் சைக்கிளும் திருடு போனது. 

இது தொடர்பாக மூன்று பேரும் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று திருட்டு சம்பவங்கள் நடந்ததால், திருடனை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். வாகன திருட்டு நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சோதனை செய்தனர். அதில் ஆத்தூர் அருகே குரும்பப்பட்டியை சேர்ந்த ஜெயராம் (52) என்பவர் திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். 

மேலும் ஜெயராம் பல்வேறு இடங்களில் திருடிய மொபட், மோட்டார் சைக்கிள்கள் என 16 இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுபற்றி காவல்துறையினர் கூறும்போது, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஜெயராம் இருசக்கர வாகன திருடியிருக்கிறார். அவ்வாறு திருடிய மொபட், மோட்டார் சைக்கிள்களை நகரங்களில் விற்பனை செய்யும் போது‌, எளிதில் கண்டுபிடித்து விட வாய்ப்பு உள்ளது. இதனால் திருட்டு வாகனங்களை கிராமங்களில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், பால் மற்றும் பூ வியாபாரிகளிடம், குறைந்த விலைக்கு விற்றுள்ளார். இதேபோல் கடந்த சில வருடங்களுக்கு முன்பும் மோட்டார் சைக்கிள்களை திருடிய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது இரண்டாவது முறையாக கைதாகி உள்ளார் என்று காவல்துறையினர் கூறினர்.