#BigBreaking: "புலிகளின் தாகம், தமிழீழ தாயகம்", ஆயுதமேந்திய போர் முடிந்தது - பிரபாகரனின் மகள் துவாரகாவின் வீடியோ.. தமிழீழ அரசியலில் புதிய திருப்புமுனை.!

#BigBreaking: "புலிகளின் தாகம், தமிழீழ தாயகம்", ஆயுதமேந்திய போர் முடிந்தது - பிரபாகரனின் மகள் துவாரகாவின் வீடியோ.. தமிழீழ அரசியலில் புதிய திருப்புமுனை.!



ltte-prabhakaran-daughter-dwaraka-video-goes-viral

 

பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் மகள் உரையாற்றிய காணொளி வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான போரில், ஈழத்தில் வசித்துவந்த இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் இலங்கை அரசால் கொடூரமாக கொல்லப்பட்டனர். கடந்த 2009 ம் ஆண்டு நடந்த இலங்கை போரின் தாக்கம் தற்போது வரை தமிழக மக்களிடையே இருந்து வருகிறது. 

அங்கு ஆயுதமேந்திய போராட்டத்தை நடத்திய விடுதலைப்புலிகள் அமைப்பின் நிறுவனர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டார். விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக இந்தியா, இலங்கை, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரனின் மகனும் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா நிலை என்பது இறுதி வரை தெரிவிக்கப்படவில்லை. சமீபத்தில், வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழ்நாட்டில் வசித்துவரும் சில தமிழ் தேசியவாதிகள் கருத்துக்களை முன்வைத்தனர். 

இந்நிலையில், வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா, காணொளி வாயிலாக உரையாற்றவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு, தற்போது அதுசார்ந்த காணொளி வெளியாகியுள்ளது. இது ஏஐ எனப்படும் தொழில்நுட்பம் சார்ந்த எடிட் செய்யப்பட்ட விடியோவா?. 

உண்மையில் பிரபாகரனின் மகள் துவாரகா உயிருடன் இருந்து, தற்போது காலச்சூழல் காரணமாக பொதுவெளியில் உரையாற்றுகிறாரா? என்பது தெரியவில்லை. கிட்டத்தட்ட 10 நிமிடம் வீடியோ வெளியாகியுள்ளது. 

இந்த வீடியோவில், "இதுநாள் வரை தனக்கு துணைநின்ற தமிழீழ, தமிழ் உறவுகளுக்கு நன்றி. நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை. தமிழீழம் கேட்கும் உரிமைக்குரல் என்றும் ஓயாது. ஆயுதமேந்திய போராட்டம் கைவிடப்பட்டது. சட்டப்போராட்டம் தொடரும். 

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா மன்றத்தில் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தவர்களுக்கு நன்றி. ஐ.நா மன்றமே இலங்கை விவகாரத்தில் இனப்படுகொலையை உறுதி செய்தாலும், தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கவில்லை. 

நாங்கள் இலங்கையில் உள்ள சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை. அரசு இயந்திரத்தை தங்களின் கைகளில் வைத்துக்கொண்டு, தமிழ் மக்கள் - சிங்கள மக்களுக்கு இடையே இதுநாள்வரை பல பிரச்சனையை ஏற்படுத்திவிட்டனர். எங்களின் சட்டப்போராட்டம் தொடரும். பாதைகள் மாறினாலும் இலட்சியம் மாறாது. புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்" என பேசியுள்ளார்.

https://tamiloli.net/ என்ற இணையப்பக்கத்தில் இதுதொடர்பான பதிவுகள் இடப்பட்டுள்ளன. மேலும், இந்த இணையதளத்தின் நிர்வாகிகள் சுவிச்சர்லாந்து நாட்டில் வசித்து வருவதும் உறுதியாகியுள்ளது. ஆனால், இந்த வீடியோ ஏஐ தொழில்நுட்பத்தின் விடோயவாக இருக்க வேண்டும். அல்லது மீண்டும் தமிழீழ அரசியலை கையில் எடுத்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்போர், வேறொரு பெண்ணை பேசவைத்து இருக்கின்றனர் என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் கிடைக்கப்பெறுகின்றன.