தமிழகம்

மகள் நகைகளை மறைத்து வைத்தது தெரியாமல் அரிசி மூட்டையை விற்ற தாய்!.. கரூரில் பரபரப்பு..!

Summary:

மகள் நகைகளை மறைத்து வைத்தது தெரியாமல் அரிசி மூட்டையை விற்ற தாய்!.. கரூரில் பரபரப்பு..!

கரூரில் அரிசி மூட்டைக்குள் தங்க நகைகள் இருப்பது தெரியாமல் விற்பனை செய்த பெண்மணியால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் தெற்கு காந்தி கிராமம் ராமலிங்க நகரைச் சேர்ந்தவர் கோவிந்தன், இவரது மனைவி சரஸ்வதி (62). இவர்களது  மகள் கனிமொழி ஐதராபாத்தில் உள்ள ஐ.டி  நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் கரூரில் உள்ள தாய் வீட்டுக்கு வந்த கனிமொழி, தனது 47.5 சவரன் தங்க நகைகளை வீட்டில் இருந்த அரிசி மூட்டையில் மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தாயிடம் எதுவும் விபரங்கள் ககூறாமல்  ஐதராபாத் சென்றுவிட்டார்.

இதற்கிடையே, அரிசி மூட்டைக்குள் தங்க நகைகள் இருப்பதை அறியாத சரஸ்வதி, அந்த அரிசி மூட்டையை விற்பனை செய்துள்ளார். இதன் பின்னர், தாய் சரஸ்வதியை தொடர்புகொண்ட கனிமொழி, அரிசி மூட்டையில் நகைகளை மறைத்து வைத்தது குறித்து கூறியுள்ளார்.

இதனை கேட்டு  அதிர்ச்சியடைந்த சரஸ்வதி, இந்த சம்பவம் குறித்து  தாந்தோணிமலை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின்பேரில், சரஸ்வதியிடம் அரிசி வாங்கிச் சென்ற மினிவேன் ஓட்டுனர் நரிக்கட்டியூர் சாலையைச் சேர்ந்த மனோஜ்(22), புதுவசந்தம் நகரைச் சேர்ந்த விமலா(47) ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement