மனைவியின் ஒற்றை கோரிக்கையை ஏற்காத கணவன்.. விரக்தி முடிவால் பலியான உயிர்.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு, ரங்கப்பனூரை சேர்ந்தவர் பிரபாகரன். இவரின் மனைவி கவிதா (வயது 23). இவர்கள் இருவருக்கும் கடந்த 5 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், 2 மகள்கள் பிள்ளைகளாக உள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று கணவன் - மனைவி இருவரும் உறவினரின் துக்க நிகழ்வுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது, கவிதா தனது தாயாரின் வீட்டில் தங்கிவிட்டு, காலை வீட்டிற்கு செல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பிரபாகரன் மறுப்பு தெரிவிக்கவே, கவிதா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், கவிதாவை மீட்டு அரசு முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள வடபொன்பரப்பி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கவிதாவுக்கு திருமணம் முடிந்து 5 வருடங்கள் மட்டுமே ஆவதால், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் விசாரணையும் நடந்து வருகிறது.