திட்டியதால் சிக்கிய மேனேஜர்: ஊழியரை தற்கொலைக்கு தூண்டியதாக சிறையில் அடைப்பு..!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள அங்குசெட்டிபாளைம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் வினோத் பாபு (35). இவரது மனைவி ரமணி (30). இவர்கள் திருமணத்திற்கு பின்பு பண்ருட்டி அருகேயுள்ள திருவதிகை, அசோக் நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். வினோத் பாபு நெய்வேலி இந்திரா நகர் ஆர்ச் கேட் எதிரில் உள்ள ஒரு தனியார் கல்வி பயிற்சி மையத்தில் மார்க்கெட்டிங் பிரிவு ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் திருவதிகை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி ரமணி பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளர். அந்த புகாரில், எனது கணவருக்கு போன் செய்த பயற்சி மையத்தின் மேலாளர் குழந்தை வேலு, பணி நிமித்தமாக திட்டினார். இந்த நிலையில் தான் அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். எனவே அந்த மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், தனியார் பயிற்சி மைய மேலாளர் குழந்தைவேலு மீது வினோத் பாபுவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்த பண்ருட்டி காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து அவரை அவர் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி, கடலூர் கேப்பர்குவாரியில் உள்ள மத்திய சிறையல் அடைத்தனர்.