இன்ஸ்டென்ட் கொள்ளையர்களாக மாறிய இன்ஸ்டாகிராம் லவ்வர்ஸ்..!



Instagram lovers turned instant pirates

கோயம்பத்தூர் மாவட்டம், வடவள்ளி அருகேயுள்ள பொம்மணாம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பெரிய ராயப்பன்( 80). இவரது மனைவி ராஜம்மாள். இவர்களது மகன் சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். மகளை திருமணமாகி கணவர் வீட்டில் உள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் கணவன் மனைவி மட்டுமே வசித்து வந்தனர். சம்பவத்தன்று ராஜம்மாள் மருத்துவமனைக்கு சென்று விட்டார். இதற்கிடையே சுமார் 2 மணியளவில் கையில் பொது அறிவு புத்தகத்துடன் முதுகில் பை ஒன்றை மாட்டிக் கொண்டு இளைஞரும், இளம்பெண்ணுடன் பெரிய ராயப்பன் வீட்டுக்கு சென்று தாகமாக இருப்பதாக கூறி குடிக்க தண்ணீர் கேட்டு உள்ளனர்.

தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்ற பெரிய ராயப்பனை பின் தொடர்ந்து சென்று வீட்டிற்குள் அவரை மடக்கி பிடித்து கைகளைய கட்டி , வாயில் பிளாஸ்திரி ஒட்டி சமையல் அறையில் தள்ளி விட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோ மற்றும் பல இடங்களில் பணம் நகைகளை தேடி வீட்டை அலசியுள்ளனர். பின்னர் வீட்டில் கிடைத்த பொருட்களை கொள்ளை அடித்து விட்டு வீட்டின் பின் கதவு வழியாக வெளியேறியுள்ளனர்.

அந்த நேரத்தில் வந்த பெரிய ராயப்பனின் மருமகள் சங்கீதா, வீட்டின் பின் பக்கமாக சென்றவர்களை மடக்கி விசாரித்த போது இருவரும் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். சங்கீதா திருடன் திருடன் எனக் கூச்சலிட்டதால் ஊரே திரண்டு அவர்களை விரட்டி உள்ளது. இதனால் ஓட முடியாத இளம்பெண் ஒரு புதரில் பதுங்கி இருந்த போது அவரை பிடித்தனர். தன்னுடன் வந்த பெண் பிடிபட்டதை அறிந்த இளைஞர் தானாக திரும்பி வந்து சிக்கிக் கொண்டார்.

வீட்டிற்குள் ராயப்பன் வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்ட நிலையில் கிடந்ததை பார்த்து ஆவேசமடைந்த அவர்கள், சிக்கிய இருவரையும் கயிற்றால் கட்டி தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்தப் பெண் திருச்சியை அடுத்த சிங்கா நல்லூரை சேர்ந்த தேவராஜ் மகள் செண்பகவள்ளி என்பதும், அந்த இளைஞர் கிருஷ்ணகிரியை சேர்ந்த தினேஷ்குமார் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்துவந்ததும், உல்லாசமாக ஊர் சுற்ற வயதான முதியவர்களை ஏமாற்றி அவர்களின் நகை பணத்தை திருடிவந்தது தெரியவந்துள்ளது.