குடி போதையில் இளைஞர்கள் அடாவடி: பெட்ரோல் பங்க் சேதம்: ஊழியர்களுக்கு அடி, உதை..!

குடி போதையில் இளைஞர்கள் அடாவடி: பெட்ரோல் பங்க் சேதம்: ஊழியர்களுக்கு அடி, உதை..!



Incident of assaulting petrol punk employees under the influence of alcohol

குடி போதையில் பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்ட ஜானகிபுரம் பகுதியில் செயல்படும் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்க் ஊழியர்களை, மதுபோதையில் இருந்த இளைஞர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் குறித்த சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சம்பவம் நடைபெற்ற தினத்தில் இரவு பெட்ரோல் பங்கிற்கு 2  டூ-வீலர்களில் வந்த இளைஞர்கள் தங்களது டூ-வீலர்களில் பெட்ரோல் நிரப்பியுள்ளனர். பெட்ரோல் நிரப்பிய பின்பும் அந்த இடத்தை விட்டு நகராத அவர்கள் நீண்டநேரம் அங்கேயே நின்று பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

இதனால் இவர்களுக்கு பின்னால் வந்தவர்கள் பெட்ரோல் போட முடியாமல் திண்டாடியுள்ளனர். இதனை கண்ட பெட்ரோல் பங்க் மேனேஜர் கார்த்தி, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்துள்ளார். இதனால் மேனேஜருக்கும், குடி போதையில் இருந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த போதை இளைஞர்கள் பங்க் ஊழியர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களின் அட்டூழியத்தை தட்டிக்கேட்ட வாடிக்கையாளர்களையும், போதை இளைஞர்கள் கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. மேலும், பெட்ரோல் நிரப்பும் பம்புகளை அங்கு வைக்கப்பட்டிருந்த மணல் வாலிகளை வீசி உடைத்துள்ளனர். இதன் பின்னர் அந்த போதை கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்தில் பெட்ரோல் பங்க்  நிர்வாகம் புகார் அளித்தது.

புகாரின் அடிப்படையில் விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  முதற்கட்ட விசாரணையில் இந்த தாக்குதலில் ஈடுபட்ட போதை இளைஞர்கள் விழுப்புரம் மாவட்டம் கண்டம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.