தமிழகம்

20 வருடங்களுக்கு பிறகு புதுக்கோட்டை விவசாயிகளை மகிழ்வித்த மழை.! உச்சகட்ட குஷியில் விவசாயிகள்.!

Summary:

புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலங்குடி, அறந்தாங்கி, கரம்பக்குடி, கந்தர்வகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இரவிலிருந்து தொடர்ந்து கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.

கரையைகடந்த புரெவி புயல் மன்னார்வளைகுடா அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. புரெவி புயல் காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலங்குடி, அறந்தாங்கி, கரம்பக்குடி, கந்தர்வகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இரவிலிருந்து தொடர்ந்து கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.

இதனால் அப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி அப்பகுதி கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதி என்ற கிராமத்தில் மழையின்மை காரணமாக விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அங்கு நிலத்தடி நீர் மட்டம் 300 அடிக்கு கீழ் சென்றதால் பலரும் விவசாயத்தை கைவிட்டனர்.

தற்போது  புரெவி புயல் காரணமாக, கனமழை வெளுத்து வாங்குவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் புயலுக்கு நன்றி கூறும் வகையில் மகிழ்ச்சியில் உள்ளனர். 20 வருடங்களுக்கு பிறகு பப்பான்விடுதி கிராமத்தில் காவிரி ஆறுபோல் வாரிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை அப்பகுதி கிராமத்து இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Advertisement