மதுபோதை தகராறில் அடித்தே கொலை... நடந்த பரபரப்பு சம்பவம்.. ஈரோட்டில் அதிர்ச்சி.!
மது போதையில் நடந்த தகராறில், நாதஸ்வர கலைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி மாரப்ப கவுண்டன்புதூர் பகுதியில் வசித்து வருபவர் பழனிசாமி (வயது 52). இவரது மனைவி முத்தம்மாள். இவருக்கு வேலுசாமி என்ற மகனும், பத்மாவதி என்ற மகளும் உள்ளனர். நாதஸ்வர கலைஞரான இவர் நேற்று காலை தண்ணீர்பந்தல்- கவுண்டன்புதூர் செல்லும் வழியில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
இந்த நிலையில், பழனிசாமி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை கண்ட பொதுமக்கள், புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த சத்தியமங்கலம் டிஎஸ்பி ஜெயபாலன் மற்றும் சரக காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பழனிசாமி தனது உறவினர்களுடன் நேற்று இரவு மது அருந்தியது தெரியவந்தது. அப்போது நடந்த தகராறில், அவரை அடித்து உறவினர் இருவரும் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
அத்துடன் காவல்துறையினர் பழனிசாமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலையில் சம்பந்தப்பட்ட 2 உறவினர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.