நகையை கொள்ளையடித்து வீட்டை தீயிட்டு கொளுத்தி பயங்கரம்.! திண்டுக்கல்லில் அதிர்ச்சி.!
திண்டுக்கல் மாவட்ட தலைமை தபால் நிலையத்தில், உதவி அதிகாரியாக பணியாற்றி வருபவர் மணிமாறன். இவரது வீடு திருநகரில் உள்ளது. இவரின் மகன் அரவிந்த், திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் வசித்து வருகிறார். மணிமாறன் தனது மனைவியுடன் சம்பவத்தன்று மகனின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீடு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், நேற்று இரவு மாடி வழியே வீட்டிற்குள் சென்று 25 சவரன் நகையை கொள்ளையடித்துள்ளனர்.
மேலும், கொள்ளை தொடர்பான தடயம் கிடைக்காமல் இருக்க, வீட்டில் உள்ள 2 அறைகளுக்கு தீவைத்துவிட்டு சென்றுள்ளனர். இதனால் பீரோவில் இருந்த பட்டுபுடவைகள், அரவிந்தன் மற்றும் அவரது மனைவியின் கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட், வீட்டு பாத்திரம் போன்ற ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

மணிமாறனின் வீட்டில் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அரவிந்தனுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த குடும்பத்தினர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். வீட்டிற்குள் சென்று பார்க்கையில் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது தெரியவந்தது. மேலும், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை உணர்ந்துள்ளனர்.
இதுகுறித்து திண்டுக்கல் காவல் துறையினருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை அணைத்துள்ளனர். பின்னர், மோப்ப நாய் வரவழைக்கப்பட்ட நிலையில், மோப்பநாய் இரயில்வே கேட் வரை சென்றுள்ளது. இதனால், வீட்டில் தடயவியல் துறையினர் உதவியுடன் கைரேகை சேகரிக்கப்பட்டு, பழைய குற்றவாளிகள் பதிவேடு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
வீட்டில் இருந்த 25 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது உறுதியான நிலையில், மொத்தமாக ரூ.10 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.