பொங்கல் பரிசு தொகை ஆயிரம் ரூபாயை ரேஷன் கடைகளுக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம்... அரசு முடிவு..!decided to give cash of Rs.1000 through ration shops for Pongal festival

வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கப் பணத்தை ரேசன் கடைகளின் மூலமாக கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் ரொக்கப் பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ரேசன் கடைகளில் அரிசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை போன்ற 21 பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது. தரமட்ட தரமற்ற பொருட்கள் வழங்கியதாக பல்வேறு இடங்களில் மக்கள் இடையே சர்ச்சை எழுந்தது. 

பல ரேசன் கடைகளில் ஒழுகிய வெல்லம் வழங்கப்பட்டது. இதனால், எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சியை விமர்சனம் செய்தனர். மேலும் மற்ற பொருட்களின் எடை குறைவாகவும் தரமற்றதாகவும் இருந்ததாக விமர்சிக்கப்பட்டது. இதனால் வருகிற பொங்கல் பண்டிகைக்கு 1000 ரூபாய் பணத்துடன் பரிசுத் தொகுப்பாக பச்சரிசியுடன் சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், ஆவின் நெய் ஆகியவை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

பணமாக கொடுக்கும் பட்சத்தில் 1000 ரூபாய் பணத்தை, வங்கிக் கணக்கு மூலம் வழங்கினால் எளிதாக இருக்கும் என்று நிதித்துறை கருத்து தெரிவித்திருந்தது. ஆனால் ரூ.2 கோடியே 23 லட்சம் ரேஷன் கார்டுகளில் 14 லட்சத்து 86 ஆயிரத்து 582 கார்டுக்கு வங்கி கணக்கு இல்லை. மேலும் ஆதார் எண் இணைக்கப்படாமல் உள்ளது. இதை பூர்த்தி செய்தால் தான் வங்கிக்கணக்கு மூலம் பணம் போட முடியும் என்பதால் பொங்கல் பரிசாக வழங்கப்படும் 1000 ரூபாய் பணத்தை ரேசன் கடை மூலம் பொதுமக்களுக்கு கையில் நேரில் கொடுப்பதுதான் சிறந்தது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே பொங்கல் பரிசுப் பணம் இந்த முறை ரேசன் கடைகளில் வழங்கப்படும் என்று தெரிகிறது. அது மட்டுமின்றி பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு இடம் பெற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. ஆனாலும் இது குறித்த ஆதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசின் சார்பில் வெளியாகவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து முடிவு செய்து இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.