தமிழகம்

கடலூர்: பாழடைந்த குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 2 மாணவர்கள் பலி., ஒருவர் கவலைக்கிடம்.!

Summary:

கடலூர்: பாழடைந்த குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 2 மாணவர்கள் பலி., ஒருவர் கவலைக்கிடம்.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாப்புலியூர், வண்டிக்குப்பம் பகுதியில் சமத்துவபுரம் உள்ளது. இந்த சமத்துவபுரத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களை குடியமர்த்த திட்டமிட்டு, 130 வீடுகள் அரசினால் கட்டி கொடுக்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட பகுதியில் எங்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று தெரிவித்து போராடிய இலங்கை தமிழர்கள், அங்கிருந்து கடந்த 2013 ஆம் வருடமே வெளியேறினர். 

இதனால் சமத்துவபுரத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் குடியிருப்பு கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் இருந்த நிலையில், புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தால் கட்டிடங்கள் பாதிக்கப்பட்டு வலுவிழந்து இருக்கிறது. 

இந்நிலையில், இன்று வண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வீரசேகர், பிரதீப் குமார், புவனேஷ் ஆகியோர் பாழடைந்த குடியிருப்பில் இருந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, கட்டிடம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. 

சுவருக்கு இடையே இருந்த சிறுவர்கள் அங்கேயே சிக்கிக்கொள்ள, பொதுமக்கள் தீயணைப்பு மீட்பு படையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில்,  வீரசேகர், பிரதீப் (வயது 17) ஆகியோரின் உடலை மீட்டனர். மேலும், புவனேஷ் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். 

பழைய கட்டிடங்கள் 2 க்கும் மேற்பட்டவை இடிந்து இருப்பதால், இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா? என்பதை கண்டறிய மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement