சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு முன்னேற்பாடு!



coronavirus-separate-ward-in-chennai

சீனாவில் இருந்து பரவிவரும் கொரனோ வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. சீனாவில் கொரனோ வைரஸ் பாதிப்பினால் இதுவரை 106 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், மேலும் 1300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சீனாவில் இதனை தடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில் சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்த நபர்களின் மூலம் தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சீனாவில் இருந்து பயணம் மேற்கொள்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனத்தின் உதவியை சீன அரசு நாடியுள்ளது. இதன்காரணமாக இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.

corono

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி விமான நிலையங்களுக்கு சீனாவில் இருந்து வரும் பயணிகள், நவீன கருவிகள் மூலம் பரிசோதனை செய்யப்படுகின்றனர். இதேபோல துறைமுகங்களிலும் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளும் தயார் நிலையில் உள்ளன. அந்த வகையில் சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக தனி வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.