தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா.? இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்.!



corona increased in tamilnadu

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தற்போதைய கொரோனா நோய் தொற்று நிலை குறித்த விவரங்களை ஆலோசனை கூட்டத்தில் சமர்ப்பித்தார்.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் திருச்சி, திருப்பூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் கரோனா தொற்று (RT-PCR) பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். பரிசோதனை அதிகரிக்கப்பட்ட பின்பும் தொற்று அதிகமாக உள்ள சென்னை, கோவை, தஞ்சாவூர், திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 8 மாவட்டங்களிலும் பரிசோதனையை மேலும் அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் பயிற்சி நிலையங்கள், குடும்ப, கலாசார மற்றும் இதர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் மூலமும், கோவை, திருப்பூர் போன்ற இடங்களில் பணியிடங்கள் மூலமும் நோய்த்தொற்று பரவி வருவது தெரிய வந்துள்ளது. முக கவசம் அணியாதது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது போன்றவையே இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும். 

corona

கொரோனா பரவல் அதிகமாக பரவும் மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்ட இணைநோய் இல்லாதவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறைய துவங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இம்மாதம் துவக்கத்தில் இருந்து, கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்பது குறித்து இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.