சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பேர் பலி!

தமிழகத்திலேயே கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வரும் சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர்.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக இந்தியாவில் மே 17ஆம் தேதி வரை மூன்றாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்றளவும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. தமிழகத்திலே சென்னையில்தான் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இந்த கொடூர வைரசால் பலியானவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதேபோல், சென்னை ராயபுரத்தை சேர்ந்த 66 வயது மூதாட்டி, கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்தநிலையில், தமிழகத்திலேயே கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வரும் சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர்.