போற்றி புகழப்படும் மாவட்ட ஆட்சியரின் மனித நேயம்!! "இப்படிப்பட்ட ஆட்சியர்கள் இருந்தால் நமக்கு அரசியல்வாதிகளே தேவையில்லை"

போற்றி புகழப்படும் மாவட்ட ஆட்சியரின் மனித நேயம்!! "இப்படிப்பட்ட ஆட்சியர்கள் இருந்தால் நமக்கு அரசியல்வாதிகளே தேவையில்லை"



collector-kandasamy-helps-ananthi

மக்களுக்கு சேவை செய்கிறேன் என்ற பெயரில் இன்றைக்கு எத்தனையோ அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் மக்களின் கடின உழைப்பை உறிஞ்சி மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மத்தியில் அத்தி பூத்தார் போல் ஆங்காங்கே ஒரு சில நல்ல அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களுக்கு மக்களுக்கு சிறந்த பணியை ஆற்றி வருகின்றனர். இவர்கள் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.

அரசு ஊழியர்கள் தங்களது பணிகளை மனித நேயத்துடன் மக்களுக்கு சேவை செய்யும் பட்சத்தில் நமது நாட்டில் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் தேவையே இல்லை என்று தோன்றும். அதைப்போன்ற ஒரு எண்ணத்தை தான்  திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு எழ செய்திருக்கிறார் மாவட்ட ஆட்சியாளர் திரு.கே.எஸ்.கந்தசாமி. அவர் அந்தப் பகுதியில் செய்து வரும் பணிகளை கண்டு மக்கள் அனைவரும் அவர்மேல் மிகுந்த மரியாதையும் அன்பும் செலுத்தி வருகின்றனர்.

thiruvanamalai district collector

அவர் அந்தப் பகுதியில் ஆற்றிவரும் சிறந்த பணிக்கும் அவரது மனிதநேயத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தான் கீழ்வரும் உண்மை நிகழ்வு:

கடந்த மூன்று ஆண்டுகளில் தங்களது தாய்-தந்தை மற்றும் பாட்டியை இழந்து தவித்து வருகின்றனர் ஆனந்தி(19), அபி(17) மற்றும் மோகன்(16). இவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கனிகிலுப்பை கிராமத்தில் வசித்து வருகின்றனர். சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்த இவர்களது தாய் அனிதா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து மன உளைச்சலில் நோய்வாய்ப்பட்டு நெசவாளர் ஆக இருந்த அவர்களது தந்தையும் மரணம் அடைந்தார்.

அதன்பின் பாட்டி ராணியின் பராமரிப்பில் மூவரும் வாழ்ந்து வந்தனர். கல்லூரி ஒன்றில் பி.ஏ.படித்து வரும் ஆனந்தி அவ்வப்போது கூலி வேலைக்கு சென்று தனது தங்கை மற்றும் தம்பியை படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது பாட்டியும் மரணம் அடைந்தார். 

எல்லோரும் அவர்களை விட்டு பிரிந்த நிலையில் தங்கை அபி மற்றும் தம்பி ஆனந்தை எப்படி படிக்க வைத்து கரை சேர்க்கப் போகிறோம் என்று விழிபிதுங்கி நின்றார் ஆனந்தி. குடும்பப் பொறுப்புகள் அனைத்தும் அவரது தலையில் விழுந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த ஆனந்திக்கு சிலர் மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை பற்றி கூறியுள்ளனர். அவர் நல்ல மனிதர் அவரிடம் உன்னுடைய குறைகளைக் கூறினால் கண்டிப்பாக அவர் உங்களுக்கு ஏதேனும் உதவி செய்வார் என கூறினர்.

அவர்களின் ஆலோசனையைக் கேட்ட ஆனந்தி கடந்த மாதம் 13ம் தேதி நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு சென்றிருந்தார். அங்கு சென்ற அவர் தான் எழுதிவைத்திருந்த மனுவுடன் அழுதபடியே நின்றுள்ளார். அவரை கண்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆனந்த அவரை அருகில் அழைத்து அவரது குறைகளை கேட்டறிந்தார். தனது தாய் தந்தை பாட்டி ஆகியோரை இழந்து வறுமையில் வாடும் தனது குடும்பத்தின் நிலையை பற்றி மாவட்ட ஆட்சியரிடம் அழுதபடியே எடுத்துக்கூறினார் ஆனந்தி. 

thiruvanamalai district collector

அவர்களின் நிலையை கேட்டறிந்து மனமுடைந்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கண்டிப்பாக என்னால் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும் என ஆராய்ந்து முயற்சி செய்கிறேன் என்று கூறி ஆனந்தியை அனுப்பி வைத்தார். 

அதன்பின் ஆனந்தியின் தாயார் அனிதா சத்துணவு அமைப்பாளராக இருந்து மறைந்ததை அறிந்தார் மாவட்ட ஆட்சியர். எனவே அதே பணியினை ஆனந்திக்கு வழங்க ஏதேனும் காலிபணியிடம் இருக்கிறதா என ஆராய்ந்து அதற்கான காலிப்பணியிடங்கள் இருப்பதை அறிந்து கொண்டார். எனவே அந்த பணியினை ஆனந்திக்கு வழங்கி விடலாம் என முடிவு செய்தார் அவர். ஆனால் அந்தப் பணியில் சேர குறைந்தபட்ச வயது 21. எனவே 19 வயது மட்டுமே நிரம்பிய ஆனந்தியை அந்த பணியில் அமர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

ஆனந்திக்கு 21 வயது நிரம்பும் வரை அந்த குடும்பம் தாங்காது, வறுமையில் அழிந்துவிடும், அந்த சிறுவன் படித்து வருகிறான் அவன் படிப்பும் பாதிக்கக்கூடாது என்று முடிவெடுத்த ஆட்சியர் ஆனந்தியின் நிலையை விளக்கி தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதி ஆனந்திக்காக அரசின் நிலையிலிருந்து விதிவிலக்கு பெற்றார்.

கருணை அடிப்படையில் ஆனந்திக்கு சத்துணவு அமைப்பாளர் பணியாணை வழங்க உத்தரவு கேட்டார். அதற்கு அனுமதி கிடைத்தது. உடனடியாக களத்தில் இறங்கிய ஆட்சியர் ஆனந்திக்கான பணியாணையை தயார் செய்தார். உடனடியாக அதை எடுத்துக்கொண்டு நேரில் சென்று ஆனந்தியிடம் வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயலை கண்ட ஆனந்தி சொல்ல வார்த்தை இன்றி கதறி அழுதார்.

அவருக்கு ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவரது சொந்த செலவிலே மதிய உணவு வரவழைத்து அவர்களுடன் அவர்களது இல்லத்திலேயே அமர்ந்து சாப்பிட்டார்.

அதோடு மட்டுமில்லாமல் ஆனந்தி விரும்பியபடி அவரது தொலைதூரக் கல்விக்கான 3 ஆண்டுகள் ஆகும் செலவை தனது சொந்த செலவாக ஏற்றுக் கொண்டார். மேலும் அவரது தங்கை அபி தனியார் கல்லூரியில் இலவசமாக படிப்பை தொடர தேவையான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார். மற்றும் அவரது தம்பி ஆனந்த் பள்ளிக்கு சென்று வர ஒரு மிதிவண்டியும் வாங்கி கொடுத்தார்.

thiruvanamalai district collector

இதில் இன்னும் மகிழ்ச்சிகரமான செய்தி என்னவெனில் மிகவும் சிதைந்த நிலையில் அவர்களது வீட்டை கண்ட மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு புதிய வீட்டைக் கட்டித் தரவும் ஆணை பிறப்பித்தார். 

இப்படிப்பட்ட மனிதநேயமிக்க மாவட்ட ஆட்சியாளர் கந்தசாமியை அந்தப் பகுதி மக்கள் போற்றி புகழ்ந்து வருகின்றனர். இவரைப்போல ஆட்சியர் இருந்தால் நமக்கு எந்த அரசியல்வாதிகளும் தேவையில்லை என்றும் கூறி வருகின்றனர்.