பிறந்தநாளுக்கு அளிக்காததால் நண்பனை போட்டுத்தள்ளிய ரௌடி.. சென்னையில் பயங்கரம்..!

பிறந்தநாளுக்கு அளிக்காததால் நண்பனை போட்டுத்தள்ளிய ரௌடி.. சென்னையில் பயங்கரம்..!


Chennai Red Hills Painter Murder Case Investigation Reports

சென்னையில் உள்ள செங்குன்றம், சரத் கண்டிகை நெல்லூர் அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வெங்கடேஷ் (வயது 22). இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி யாஸ்மின். இந்த தம்பதிகளுக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ளது. வெங்கடேஷுக்கு இதய பிரச்சனை இருந்து வந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில், கடந்த 21 ஆம் தேதி வெங்கடேஷ் நண்பர்களை பார்க்க சென்ற நிலையில், அவர் மதியம் சாப்பிட வீட்டிற்கு வரவில்லை. கணவருக்கு மனைவி தொடர்பு கொண்டு பேசிய நிலையில், விரைவில் வீட்டிற்கு வந்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார். பின்னர், மாலை நேரத்தில் வெங்கடேஷுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டார் எனவும், வெங்கடேஷின் நண்பர் ஜீவா யாஸ்மினுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதனை நம்பாத யாஸ்மின் கணவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிவில் வெங்கடேஷ் முகத்தில் தாக்கப்பட்டு, தரையில் விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தது அம்பலமானது. 

chennai

அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆவடி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 20), ஜீவா (வயது 21), 17 வயது சிறுவன், ஆரிக்கம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் யஸ்வந்த் (வயது 21). இவர்கள் அனைவரும் வெங்கடேஷின் நண்பர்கள் ஆவார்கள். கடந்த 21 ஆம் தேதி சத்தியமூர்த்திக்கு பிறந்தநாள் வந்த நிலையில், அவர் ஜீவா மற்றும் வெங்கடேசனுடன் செங்குன்றத்தில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அனைவரும் மதுபானம் அருந்திவிட்டு, காட்டூருக்கு வந்து சிக்கன் கடையில் பகோடா சாப்பிட்டுள்ளனர். 

இந்த விஷயத்தை கண்ட 17 வயது சிறுவன், ரௌடியாக வலம்வந்த யஷ்வந்திடம் சத்தியமூர்த்தியின் பிறந்தநாள் விழாவுக்கு நம்மை அழைக்காமல் கொண்டாடுகிறார்கள் என்று கூறவே, காட்டூருக்கு வந்த 17 வயது சிறுவன் மற்றும் யஷ்வந்த் பிற நண்பர்களிடம் கேட்டுள்ளனர். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட, ஜீவாவை யஷ்வந்த் அடித்துள்ளார். வெங்கடேஷ் யஷ்வந்த்தை தடுக்க வந்த நிலையில், அவர் வெங்கடேஷின் முகம் மற்றும் மார்பில் குத்தி, கீழே தள்ளியுள்ளார். 

இதனால் வெங்கடேசனின் மூக்கு உடைந்து, பின்தலையில் அடிபட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்ட ஜீவா மற்றும் சத்தியமூர்த்தி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மருத்துவர்கள் வெங்கடேஷ் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த அதிகாரிகள் யஷ்வந்த் (வயது 21) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.