
cable tv broadcasts service stopped tomorrow
மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் புதிய கட்டண விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுநாள் கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தம் செய்யப்படும் என தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் கேபிள் மற்றும் டிடிஹெச் சேவை கட்டணம் பற்றி மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் "டிராய்" அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ 153 ரூபாய் 40 காசுகளுக்கு தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவித்தது.
இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படிருந்தது. டிராயின் இந்த புதிய விதிமுறைக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரம், இந்தக் குறைந்தபட்ச கட்டண திட்டத்தில் எச்.டி. தொழில்நுட்ப சேனல்களை தேர்ந்தெடுக்க முடியாது. எச்.டி. சேனல்கள் அல்லது கூடுதல் சேனல்கள் தேவைப்படுபவர்கள் அதற்குரிய கூடுதல் கட்டணத்தை செலுத்தி பார்க்கலாம். இதுபோல ஒரு சேனலுக்கு அதிகபட்சமாக மாதத்துக்கு ரூ.19-க்கு மேல் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்த புதிய முறையால் கேபிள் டிவி கட்டணம் 200 ரூபாய்க்கு மேல் வசூலிக்க வேண்டி வரும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் கேபிள் ஆபரேட்டர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்று கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் டிராயின் புதிய கட்டண விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாளை கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தம் செய்யப்படும் என தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement