தமிழகம்

காதல் மனைவி 6 மாதத்தில் விவாகரத்து கோரியதால் பரிதாபம்.. Mr. தமிழ்நாடு தூக்கிட்டு தற்கொலை..!

Summary:

காதல் மனைவி 6 மாதத்தில் விவாகரத்து கோரியதால் பரிதாபம்.. Mr. தமிழ்நாடு தூக்கிட்டு தற்கொலை..!

காதல் மனைவி விவாகரத்து கேட்டதால், மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் இரண்டாம் இடம்பிடித்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.

சென்னையில் உள்ள ராயபுரம் எம்எஸ் கோவில் தெருவில் வசித்து வருபவர் மதன் .இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அத்துடன் 4 மாதங்களாக சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் ஊர்க்காவல் படை காவலராக பணிபுரிந்து வந்த நிலையில், ஹேமலதா என்ற ஒரு பெண்ணை 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

மேலும், பெற்றோர் சம்மதத்துடன் கடந்த டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அப்போது உயர்படிப்பு படிப்பது தொடர்பாக ஹேமலதாவுக்கு, மதனுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மனவிரக்தியடைந்த ஹேமலதா தனக்கு விவாகரத்து தருமாறு மதனிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால், மதன் தான் கட்டிய தாலியை கேட்டுள்ளார்.

மேலும், "உயிரோடு இருக்கும் வரை விவாகரத்து கொடுக்க மாட்டேன் என்றும், என்னால் உன் படிப்பிற்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது. நீ தாய் வீட்டில் சந்தோஷமாக இருக்கலாம் என்றும், நான் கேட்ட தாலி இன்னும் 12 மணி நேரத்தில் நீயே கழற்றி கொடுப்பாய்" என உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்து, தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற விபரீத முடிவை எடுத்துள்ளார்.இதனையடுத்து மதன் நீண்ட நேரமாக படுக்கையறையில் இருந்து வெளியே வராததால், ஹேமலதாவின் உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது படுக்கையறையில் அவர் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதனால் அவரை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு பின், மகனின் உடலை மனைவி ஹேமலதாவிடம் கொடுக்கக்கூடாது என்று மதனின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பெற்றோரின் வீட்டிற்கு உடலை கொடுக்ககூடாது என்று மனைவி ஹேமலதாவின் தரப்பினரும் கூறியதால், இவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

பின் காவல்துறையினரின் நீண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, மதனின் உடலை ஹேமலதா வீட்டில் அரைமணிநேரம் வைத்துவிட்டு, பெற்றோர் வீட்டிற்கு சென்று அடக்கம் செய்யலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் தம்பதிகளுக்கு இடையே பிரச்சனை என்றால் இருவரும் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றும், அதற்காக தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக்க வேண்டாம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement