தமிழகம்

ரஷ்யாவில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 4 மருத்துவ மாணவர்கள் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது!

Summary:

Bodies of 4 medical students who drowned in Russia brought to Chennai

சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தைச் சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியைச் சேர்ந்த ராமு விக்னேஷ், சேலம் மாவட்டம் தலைவாசலைச் சேர்ந்த மனோஜ் ஆகிய நான்கு இளைஞர்கள் ரஷ்யாவின் Volgograd பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழக விடுதியில் தங்கி மருத்துவம் படித்துவந்தனர்.

அந்த மாணவர்கள் ரஷ்யாவின் வால்கா நதிக்கரைக்கு சென்றபோது  நீரில் மூழ்கி அடித்துச்செல்லப்பட்டு நான்கு பேர் உயிரிழந்தனர். தங்களது மகன் மருத்துவராக இந்தியா வரவேண்டும் என்ற கனவோடு காத்திருந்த பெற்றோருக்கு மகன் உயிரிழந்த தகவல் கேட்டதும் கதறி துடித்துள்ளனர். தற்போது கொரோனா சமயம் என்பதால் 4 பேரின் உடலையும் விரைவாக தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென இறந்த மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தினர்.

பலியான மாணவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய வெளியுறவுத்துறைக்கு கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் பா.ஜ.க. உள்பட பல அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இந்தநிலையில் 4 மாணவர்களின் உடல்கள் ரஷியாவில் இருந்து துருக்கி நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன. துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு வரும் துருக்கீஸ் ஏர்லைன்ஸ் கார்கோ விமானம் மூலம் நேற்று மாலை 4 மணிக்கு மாணவர்களின் உடல்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.

பின்னர் மாணவர்கள் 4 பேரின் உடல்களை அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்பு ஒவ்வொரு உடலும் தனித்தனி ஆம்புலன்சுகளில் ஏற்றப்பட்டு மாணவர்களின் வீடுகளுக்கு தமிழக அரசின் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.


Advertisement