அரசு பேருந்து - இருசக்கர வாகனம் மோதி கோர விபத்து.. 3 பேருக்கு நேர்ந்த சோகம்.!

அரசு பேருந்து - இருசக்கர வாகனம் மோதி கோர விபத்து.. 3 பேருக்கு நேர்ந்த சோகம்.!


Ariyalur Sooriyamanal Govt Bus Two Wheeler Crash 3 Injured Admit Hospital

இருசக்கர வாகனமும் - அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், பணிக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய 3 கொத்தனார்கள் படுகாயம் அடைந்தனர். 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம், சூரியமணல் கிராமத்தை சார்ந்தவர்கள் இளையராஜா (வயது 33), இராஜேந்திரன் (வயது 34), கார்த்திகேயன் (வயது 31). இவர்கள் 3 பேரும் கொத்தனார்கள் ஆவார்கள். மூவரும் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கோவிலில் கட்டிட பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

சம்பவத்தன்று, தங்களது பணியை முடித்துக்கொண்ட மூன்று பேரும், இரவு 10 மணியளவில் சூரியமணல் கிராமத்தை நோக்கி பயணம் செய்துள்ளனர். இவர்கள் சிற்ப கலைக்கூடம் அருகே செல்கையில், அவ்வழியாக வந்த அரசு பேருந்து, 3 பேரும் பயணித்த இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதியுள்ளது. 

Ariyalur

பேருந்தின் முன்புற சக்கரத்தில் இருசக்கர வாகனம் சிக்கிக்கொண்டதை அடுத்து, இருசக்கர வாகனத்தில் பயணித்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதன்போது, எதற்ச்சையாக அவ்வழியாக சென்ற அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் காவல் அதிகாரிகள், மூவரையும் மீட்டு காவல் வாகனத்திலேயே ஏற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதி செய்தனர். 

இவர்களுக்கு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இளையராஜா மட்டும் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஜெயங்கொண்டம் காவல் துறையினர், பேருந்தின் ஓட்டுநர் குமாரை (வயது 52) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.