தமிழகம்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் 9 புதுக்கோட்டை மாணவர்கள்.!

Summary:

உக்ரைனில் சிக்கி தவிக்கும் 9 புதுக்கோட்டை மாணவர்கள்.!

உக்ரைன் மீது ரஷிய படைகள் போர்தொடுத்து 7-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடர்ந்து உக்கிரம் அடைந்துள்ளதால் இரண்டு நாட்டிலும் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. 

இந்தநிலையில், போர்க்களமாக மாறியிருக்கும் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைனில்  மருத்துவம் படிக்க சென்ற தமிழக மாணவ-மாணவிகள் தவித்து வருகின்றனர். அங்குள்ள தமிழர்களை மீட்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.  உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மாணவர்களை மீட்பதற்கான பணிகளை மத்திய அரசோடு இணைந்து மாநில அரசும் தீவிரமாக செயல்பட வேண்டும் என அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 மாணவர்கள் மருத்துவ படிப்புக்காக உக்ரைன் சென்றதும், அங்கு அவர்கள் சிக்கித்தவித்து வருவதும் தெரியவந்துள்ளது. அங்குள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோரின் விவரங்களை புதுக்கோட்டை மாவட்ட போலீசார் சேகரித்துள்ளனர். மேலும் மாணவர்களின் பெற்றோருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் மூலம் தேவையான உதவிகளை செய்து தர தயாராக இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


Advertisement