முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் பெட்ரோல் பங்க்கில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்: ரூ.1.25 லட்சம் கொள்ளை..!

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் பெட்ரோல் பங்க்கில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்: ரூ.1.25 லட்சம் கொள்ளை..!


1.25 lakh robbery from petrol station at thiruvallur

திருவள்ளூர் அருகே பெட்ரோல் பங்கில் இருந்து ரூ.1.25 லட்சம் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்திற்கு அருகிலுள்ள வடமதுரை பகுதியை சேர்ந்தவர் கோதண்டன். வடமதுரை ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவரான கோதண்டன் தொழிலதிபரும் ஆவார். இவர் வடமதுரை பெரிய காலனி அருகேயேயுள்ள  நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று நடத்தி வருகிறார்.

பெட்ரோல் பங்க்கில், மேலாளராக தனசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடன் பெட்ரோல், டீசல் நிரப்பும் பணிக்கு பம்ப் பாய்கள் இருவர் நேற்று பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய விற்பனை கணக்கு வழக்குகளை முடித்த பின்பு, கையிருப்பில் இருந்த  தொகையில் ரூ.1.25 லட்சத்தை இன்று காலை வங்கியில் செலுத்துவதற்காக கல்லாவில் வைத்து பூட்டிவிட்டு இரவு 11.30 மணிக்கு மூன்று பேரும் பெட்ரோல் பங்கில் உள்ள ஒரு அறையில் படுத்து தூங்கியுள்ளனர்.

பின்னர் இன்று விடியற்காலை எழுந்து பார்த்தபோது, கல்லா இருந்த அறையின் கதவை உடைத்த மர்மநபர்கள் கல்லாவில் இருந்த ரூ.1.25 லட்சம் மற்றும் சி.சி.டி.வி கேமராவிற்கு பொருத்தப்பட்டிருந்த டி.வி.டி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து கோதண்டன் மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.