முக்கிய கட்டத்தில் கோட்டை விட்ட சென்னை..!! அபார பந்துவீச்சால் கட்டிப் போட்ட கொல்கத்தா..!!Kolkata won the 61st league match against Chennai by 6 wickets

சென்னை அணிக்கு எதிரான 61 வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 61 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. சென்னையில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 61 வது லீக் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணிக்கு டெவன் கான்வே-ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. கொல்கத்தா வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் அதிரடியாக விளையாட முடியாத சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் 15 ரன்களுடனும் அடுத்துவந்த ரஹானே 16 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

ஓரளவு சிறப்பாக விளையாடிய டெவன் கான்வே 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிவம் துபே அதிரடியாக விளையாட ரன்-ரேட் மெதுவாக உயர்ந்தது. அவருடன் இணைந்த ஜடேஜா 20 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, கேப்டன் தோனி களமிறங்கினார். அவராலும் பெரிய அளவில் அதிரடி காட்ட இயலவில்லை. ஷிவம் துபே கடைசிவரை ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது.

இதனையடுத்து 145 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு குர்பாஸ்-ஜேசன் ராய் ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. பவர் பிளேவில் பந்து வீசிய சென்னை வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர், குர்பாஸ் 1, வெங்கடேஷ் அய்யர் 9, ஜேஸன் ராய் 12 ஆகியோரது விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார். இந்த நிலையில் இணைந்த நிதிஷ் ராணா-ரின்கு சிங் ஜோடி அணியை சரிவில் இருந்து மெதுவாக மீட்டது.

தொடக்கத்தில் ஒன்று, இரண்டாக ரன் சேர்த்த இந்த ஜோடி ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டவும் தவறவில்லை. படிப்படியாக அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற இந்த ஜோடியில் ரின்கு சிங் முதலில் அரைசதம் விளாசி 54 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நிதிஷ் ராணா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 18.3 ஓவரில் 147 ரன்கள் சேர்த்த கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.