தொடரும் கோலியின் சாதனை பட்டியல்! கங்குலியின் சாதனையை முறியடித்து முதலிடம்
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இருந்து வரும் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கோலி குறைவான போட்டிகளில் பல மைல்கல்லை எட்டிப்பிடித்துள்ளார்.
இதுவரை பேட்டிங்கில் மட்டும் சாதனை படைத்தது வந்த கோலி, தற்போது ஒரு கேப்டனாகவும் பல சாதனைகளை முறியடிக்க துவங்கிவிட்டார். இவரது தலைமையிலான இந்திய அணி தற்போது டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தையும், ஒருநாள் போட்டிகளில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இநித்யா அணிக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்.
இந்த போட்டியில் வென்றதன் மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற இந்திய கேப்டன்கள் வரிசையில் தோணியுடன் முதல் இடத்தை பகிர்ந்துள்ளார். 60 போட்டிகளுக்கு தலைமையேற்று 27 வெற்றிகளை குவித்த தோணியுடன் 47 போட்டிகளில் மட்டுமே தலைமையேற்று அந்த இடத்தை பிடித்துள்ளார் கோலி.

மேலும் வெளிநாடுகளில் அதிக போட்டிகளை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார் கோலி. இதற்கு முன்னதாக வெளிநாடுகளில் 28 போட்டிகளில் தலைமையேற்று கங்குலி 11 வெற்றிகளை பெற்றுள்ளார். தற்போது 26 போட்டிகளுக்கு தலையேற்றுள்ள கோலி இதுவரை 12 போட்டிகளில் வெற்றியை தேடி தந்துள்ளார்.