இங்கிலாந்தில் வீசிய பும்ரா புயல்; வெற்றியின் விளிம்பில் இந்தியா

இங்கிலாந்தில் வீசிய பும்ரா புயல்; வெற்றியின் விளிம்பில் இந்தியா


india is about to win against england

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 
ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, பாண்ட்யாவின் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாண்ட்யா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

bumrah

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி சதமடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி வெற்றிபெற 521 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. 

bumrah

3 -வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் இன்று 4 -ம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்கத்தில் இந்திய அணியின் வேகத்தில் இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. குக் 17 ரன்னிலும், ஜென்னிங்ஸ் 13 ரன்னிலும், ரூட் 13 ரன்னிலும், போப் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒருகட்டத்தில் இங்கிலாந்து அணி 62 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து தத்தளித்தது.

அதன் பின்னர் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் இணை அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பட்லர் அதிரடியாக விளையாடிச் சதமடித்தார். ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்தார். 

bumrah

80 ஓவர்களுக்கு பின்னர் புதுப்பந்து எடுக்கப்பட்டது. அதன் பின்னர் பும்ரா மற்றும் பாண்ட்யா சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். பட்லர் 106 ரன்னிலும், ஸ்டோக்ஸ் 62 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பயர்ஸ்டோ வந்த முதல் பந்திலே போல்டு ஆனார். 230 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என இருந்த இங்கிலாந்து, அடுத்த 11 ரன்களில் 4 விக்கெட்டுகள் இழந்தது. அதன் பின்னர்  ரஷித் மற்றும் ஸ்டுவர்ட் பிராட்  ஜோடி  50 ரன்கள் எடுத்தது.

4 -ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது.  இந்திய அணித் தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தார்,  இங்கிலாந்து அணி வெற்றிபெற இன்னும் 210 ரன்கள் தேவை. இந்திய அணி வெற்றிபெற இன்னும் ஒரு விக்கெட் தான் தேவை.