வாய்ப்பை கோட்டை விட்ட ஐதராபாத்..!! முதல் அணியாக ப்ளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்த குஜராத்..!!

வாய்ப்பை கோட்டை விட்ட ஐதராபாத்..!! முதல் அணியாக ப்ளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்த குஜராத்..!!



Gujarat Titans qualified for the play-off round as the first team.

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற குஜராத் அணி ப்ளே-ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 61 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று நடைபெற்ற 62 வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்-சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

இந்த போட்டியில் வென்றால் முதல் அணியாக ப்ளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் குஜராத் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் தோல்வியடைந்தால் ப்ளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிடும் என்ற நெருக்கடியில் ஹைதராபாத் அணியும் களமிறங்கியது. இதனை தொடர்ந்து டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விருத்திமான் சஹா-சுப்மன் கில் ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணி ரன் கணக்கை தொடங்கும் முன்னரே விருத்திமான் சஹா புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன் பின்னர் சுப்பன் கில்லுடன் கை கோர்த்த சாய் சுதர்சன் அதிரடியாக தொடங்கினார். மறுமுனையில் சரவெடியாய் வெடித்த சுப்மன் கில் 20 பந்துகளில் அரைசதம் விளாசி அமர்களப்படுத்தினார். சாய் சுதர்சன் 47, ஹர்திக் பாண்டியா 8, மில்லர் 7, ராகுல் திவாட்டியா 3 ரன்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதற்கிடையே 57 பந்துகளை சந்தித்த சுப்மன் கில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. ஐதராபாத் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். பாருக்கி, நடராஜன் தலா 1 விக்கெட்டை கைப்பர்றினர். இதனை தொடர்ந்து 189 ரன்கள் இலக்கை துரத்திய ஐதராபாத் அணிக்கு ஆரம்பத்தியேயே அதிர்ச்சி காத்திருந்தது.

குஜராத் வீரர்களில் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி 59 ரன்களை சேர்ப்பதற்குள் மளமளவென 7 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு முனையில் போராடிய ஹென்றி கிளாசன் அரைசதம் கடந்து 64 ரன்களுடனும், அவருடன் இணைந்து போராடிய புவனேஷ்வர் குமார் 27 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் அந்த அணி ப்ளே-ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. குஜராத் அணி தரப்பில் முகமது ஷமி, மோகித் சர்மா தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.