குவாலிபையர் 2 : இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்..?!! பரபரப்பான கட்டத்தில் குஜராத்-மும்பை அணிகள் மோதல்..!!

குவாலிபையர் 2 : இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்..?!! பரபரப்பான கட்டத்தில் குஜராத்-மும்பை அணிகள் மோதல்..!!


gujarat-titans-mumbai-indians-clash-in-the-2nd-qualifyi

ஆமதாபாத்தில் இன்று நடைபெறும் 2 வது தகுதி சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், லீக் போட்டிகள் அனைத்தும் நடந்து முடிந்துள்ளன. புள்ளிகளின் அடிப்படையில் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை அணிகள் ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய ப்ளே-ஆப் சுற்றின் முதலாவது தகுதி சுற்று போட்டியில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் பின்னர் நடைபெற்ற எலிமினேட்டர் என்கிற வெளியேற்றுதல் சுற்றில் லக்னோ அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடிய மும்பை அணி 2 வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

இந்த நிலையில், இன்று நடைபெறும் 2 வது தகுதி சுற்று போட்டியில் குஜராத்-மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் என்பதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த தொடரில் லீக் சுற்றின் முடிவில் 20 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. முக்கியமான கட்டத்தில் நடைபெற்ற முதலாவது தகுதி சுற்று போட்டியில் தோல்வியடைந்த குஜராத் அணி, இன்று நடைபெறும் 2 வது தகுதி சுற்று போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது. அந்த அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற கடுமையாக போராடும்.

அந்த அணியில், சுப்மன் கில் 722 ரன்கள் குவித்ததுடன் 2 சதங்களை விளாசி வலுவான நிலையில் உள்ளார். மேலும் விஜய் சங்கர் 301, விருத்திமான் சஹா 299 ரன்களுடன் பேட்டிங் வரிசையில் வலுசேர்க்கின்றனர். பந்துவீச்சை பொறுத்தவரை முகமது ஷமி 26, ரஷித்கான் 25, மொகித் ஷர்மா 19 விக்கெட்டுகளை வீழ்த்தி பலம் சேர்க்கின்றனர். உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 7 லீக் போட்டிகளில் 5 ல் தோல்வியடைந்து சரிவை சந்தித்த போதும் சரியான நேரத்தில் எழுச்சி பெற்று ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணியில் சூர்யகுமார் 544, ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் 422 ரன்களுடன் 6 விக்கெட்டையும் வீழ்த்தி வலு சேர்கின்றனர்.

பந்து வீச்சை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர் பியுஷ்சாவ்லா 21, வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் 13 விக்கெட்டுகளுடன் நம்பிக்கை அளிக்கிறார்கள். இன்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் 7 வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதிபெறுவதுடன் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக முறை இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற 2 வது அணி என்ற சாதனை படைக்கும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியதில் குஜராத் 2 போட்டிகளிலும், மும்பை 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொடரில் ஆமதாபாத்தில் 7 போட்டிகளில் பங்கேற்றுள்ள குஜராத் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.