தோனியை விட்டுவிட்டால் மீண்டும் கிடைக்க மாட்டார்! இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் எச்சரிக்கை!
தோனியை விட்டுவிட்டால் மீண்டும் கிடைக்க மாட்டார்! இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் எச்சரிக்கை!

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் தோனியால் இந்திய அணிக்கு இன்னும் கணிசமான பங்களிப்பை அளிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
கடந்த 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்விக்குப் பின் தோனி எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. மேலும், கொரோனா பாதிப்பால், 2020 ஐபிஎல் போட்டி, ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2020 ஐபிஎல் போட்டி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் நடக்காமல் போனால் தோனியின் நிலைமை என்ன ஆகும் என்பதற்குப் பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் 38 வயதான தோனிக்கு ஆதரவாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன் குரல் கொடுத்துள்ளார். தொலைக் காட்சி ஒன்றுக்கு நாசர் உசேன் அளித்த ஒரு பேட்டியில், ‘ஒருமுறை தோனி ஓய்வு பெற்று விட்டால், அதன் பிறகு அவரை மீண்டும் அணிக்கு கொண்டு வர முடியாது. கிரிக்கெட் விளையாட்டில் உலகமே போற்றக் கூடிய ஒரு சில ஜாம்பவான்களே இருக்கிறார்கள். அத்தகைய மகத்தான வீரர்களை அரிதாக, அதாவது தலை முறைக்கு ஒருவரைத் தான் பார்க்க முடியும். அப்படிப்பட்ட தோனியை அவசரப்பட்டு முன்கூட்டியே ஓய்வு பெற வைத்து விடாதீர்கள்.
டோனியின் மனதில் என்ன உள்ளது என்பது அவருக்கு மட்டுமே தெரியும். எது எப்படியோ அவர் மீண்டும் களம் இறங்குவது தேர்வாளர்களின் கையில்தான் உள்ளது. நான் தோனியை பார்த்தவரையில், அவரால் இந்திய கிரிக்கெட்டுக்கு இன்னும் நிறைய பங்களிப்பு அளிக்க முடியும் என்று நினைக்கிறேன் என நாசர் உஷேன் தெரிவித்தார்.