இந்தியா எனக்கு இரண்டாவது தாய் வீடு.! பணத்தை அள்ளிக்கொடுத்து இந்தியாவிற்க்காக உருகிய ஆஸ்திரேலிய வீரர்.!brett-lee-donates-money-for-india

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு தற்போது ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்திற்கும் மேல் பதிவாகி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழக்கும் சம்பவமும் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இந்தியாவிற்காக உதவி கரம் நீட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு மருத்துவமனையில், ஆக்சிஜன் வாங்கி சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.37 லட்சம் (50 ஆயிரம் டாலர்) நன்கொடையாக வழங்குவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், முன்னாள் ஆஸ்திரேலியா வேக பந்து வீச்சாளர் பிரட் லீ ரூ.41 லட்சம் இந்தியாவிற்கு நிதியுதவி அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியா எப்போதுமே எனக்கு இரண்டாவது தாய் வீடு போல இருந்துள்ளது. நான் கிரிக்கெட்டில் இருந்த போதும், ஓய்வு பெற்ற பின்னரும் கூட இந்த நாட்டு மக்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அன்பும் பாசமும் என் இதயத்தில் ஒரு சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது.

இந்திய மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு துன்பப்படுவதை பார்க்கும்போது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் பொருட்களை வாங்குவதற்கு உதவுவதற்காக ரூ.41 லட்சம் நன்கொடை அளிக்கிறேன். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கொரோனா தொற்றை ஒழிக்க வேண்டும். முன்களபணியாளர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமை பெற்றிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.