புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
விராட் கோலியின் இன்னிங்ஸ் ரசிகர்களின் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது: ராஜீவ் சுக்லா பெருமிதம்..!!
விராட் கோலியின் இன்னிங்ஸ் ரசிகர்களின் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது என்று பி.சி.சி.ஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர்-4 சுற்று நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய சூப்பர்-4 சுற்றின் 2 வது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் படி இந்திய அணியின் இன்னிங்ஸை சுப்மன் கில்-ரோஹித் சர்மா ஜோடி தொடங்கியது. தொடக்கத்தில் ரோஹித் சர்மா பொறுமையாக தொடங்க, பட்டாசாய் வெடித்த சுப்மன் கில் 37 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன் பின்னர் ஷதாப்கானின் சுழற்பந்துவீச்சை விளாசிதள்ளிய ரோஹித் சர்மாவும் அரைசதம் கடந்தார். இது அவருக்கு 50வது அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பான தொடக்கம் கண்ட இந்த ஜோடி 16.4 ஓவரில் பிரிந்தது, இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்தது. முதலில் 56 (49) ரன்களுடன் ரோஹித் சர்மாவும், அடுத்ததாக 17.5 ஓவரில் சுப்மன் கில் 58 (52) ரன்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் இணைந்த விராட் கோலி-கே.எல்.ராகுல் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது.
24.1 ஓவரின் இறுதியில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது மழையின் குறுக்கீட்டால் போட்டி ரத்து செய்யப்பட்டது. மாற்று நாளான நேற்று மீண்டும் போட்டி தொடர்ந்தது. நங்கூரமாக நிலைத்து நின்ற விராட் கோலி-கே.எல்.ராகுல் ஜோடி பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தது.
கே.எல்.ராகுல் 100 பந்துகளிலும், விராட் கோலி 84 பந்துகளிலும் சதம் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இந்த ஜோடியின் அதிரடியால் 45 ஓவர்களில் 300 ரன்களை கடந்த இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது. விராட் கோலி 122 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 111 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனை தொடர்ந்து 357 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி இந்திய அணியினரின் அபார பந்துவீச்சில் 128 ரன்களுக்கு சுருண்டது. இந்த போட்டியில் அதிவேகமாக (278 இன்னிங்ஸ்) 13 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி தனதாக்கினார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் தனது 330 ஆவது இன்னிங்ஸில் 13 ஆயிரம் ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது.
இந்திய அணியின் வெற்றி குறித்தும், விராட் கோலியின் சாதனை குறித்தும் பேசிய பி.சி.சி.ஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, 'விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 13000 ரன்கள் குவித்ததன் மூலம் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். இது மிகப்பெரிய சாதனையாகும். இந்த போட்டியில் விராட் கோலி விளையாடிய விதம் ரசிகர்களின் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது, இந்திய அணிக்கு வாழ்த்துகள்' என்று கூறியுள்ளார்.