விளையாட்டு

“மிரட்டிய ஆஸ்திரேலியா; போராடிய ரோகித் சர்மா" ஆஸ்திரேலியா அபார வெற்றி!

Summary:

Aus won by 34 runs in 1st odi

சிட்னியில் இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ரோகித் சர்மா 133 ரன்கள் அடித்தார். 

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பத்திலேயே பின்ச் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணி பிறகு மீண்டு எழுந்தது. அந்த அணியின் கவாஜா, ஷான் மார்ஷ், ஹ்ன்ஸ்கோம்ப் ஆகியோர் அரைசதமடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 

50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் 11 ரன்களும் ஸ்டாய்னிஸ் 47 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா துவக்கத்திலிருந்தே தடுமாறினர். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே அறிமுக பந்துவீச்சாளர் பெகரண்ட்ஆப் பந்தில் ஷிகர் தவன் டக் அவுட் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கோலி 4-வது ஓவரில் ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் 3 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற அவரை தொடர்ந்து வந்த அம்பத்தி ராயுடு ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். இந்நிலையில் 4 ஓவர் முடிவில் இந்திய அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. 

பின்னர் ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த தோனி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தோனி ஒருநாள் போட்டியில் 10000 ரன்களை கடந்தார். ரோகித் சர்மா அவ்வப்போது சிக்சர்களை விளாசி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதமடித்தனர். மேலும் நான்காவது விக்கெட்டிற்கு இருவரும் சேர்ந்து 100 ரன்களை கடந்தனர். 

இவர்களின் ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. இவர்கள் இருவரும் கடைசிவரை ஆடினால் இந்தியா வென்று விடும் என்ற நிலை இருந்தது. ஆனால் நம்பிக்கை நீண்ட நேரம் நிலைக்கவில்லை 96 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த தோனி ஆட்டத்தின் 33 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 141 ஆக இருந்தது. அதிரடியாக ஆடிய ரோகித் சர்மாவிற்கு தினேஷ் கார்த்திக் கைகொடுத்தால் இந்தியா வென்று விடும் என்ற நம்பிக்கை இருந்தது. 

ஆனால் தினேஷ் கார்த்திக் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் தனது 22 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இந்திய அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ரோகித் சர்மா கடுமையாகப் போராடினார். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது சிறப்பான பந்துவீச்சால் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். 

ஜடேஜா 8 ரன்னிலும் ரோகித் சர்மா 133 ரன்கள், குல்தீப் 3 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணியின் தோல்வி உறுதியானது. ஆட்டத்தின் கடைசி பந்தில் ஒரு ரன்கள் எடுத்து சமி ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் மட்டும் எடுத்தது. புவனேஷ் குமார் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 29 ரன்கள் எடுத்தார். 

இந்நிலையில் முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் ரிச்சர்ட்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும் பெகரன்டார்ப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


Advertisement