இந்த பையன் சாதாரண ஆள் இல்ல! சீசன் ஆரம்பத்துல சிரமப்பட்டான்... இப்போ சிக்ஸர் பறக்குது! வைபவ் சூர்யவன்ஷியின் பெற்றோருக்கு அஸ்வின் கொடுத்த அந்த ஒரு அட்வைஸ்..!!!
ஐபிஎல் 2026 தொடரில் 15 வயதிலேயே மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வைபவ் சூர்யவன்ஷி குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக எலிமினேட்டர் போட்டியில் அவர் விளாசிய அதிரடி இன்னும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவரது இன்னிங்ஸில் 12 சிக்ஸர்கள் இடம்பெற்றிருந்தது ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியது. கிறிஸ் கெயிலின் 30 பந்துகளில் சதம் என்ற சாதனையை உடைக்கும் வாய்ப்பு இருந்தபோதும், மூன்று ரன்கள் வித்தியாசத்தில் அது தவறியது.
65 சிக்ஸர்களுடன் புதிய சாதனை
இந்த சீசன் முழுவதும் அதிரடி ஆட்டம் காட்டிய வைபவ், மொத்தமாக 65 சிக்ஸர்கள் விளாசி கிறிஸ் கெயிலின் பழைய சாதனையையும் முறியடித்துள்ளார். அதோடு மட்டும் இல்லாமல், தொடரில் 680 ரன்கள் குவித்து சாய் சுதர்சன், ஷுப்மன் கில், விராட் கோலி ஆகியோரைக் கடந்து மீண்டும் ஆரஞ்சு கேப்பையும் கைப்பற்றியுள்ளார்.
15 வயதில் இவ்வளவு முதிர்ச்சியான ஆட்டம் ஆடுவது பல முன்னாள் வீரர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஆரம்ப போட்டிகளில் சில பலவீனங்கள் இருந்தபோதும், அதையே குறுகிய காலத்தில் சரி செய்து கொண்ட விதம் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
அஸ்வினின் ‘திஷ்டி’ அட்வைஸ்
வைபவ்வின் வளர்ச்சி குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், “15 வயசுல இந்த பையனுக்கு இப்படியா முதிர்ச்சி வந்திருக்கு. சீசன் ஆரம்பத்தில் சில பந்துகளுக்கு சிரமப்பட்டான். இப்போ அதே பந்தை சிக்ஸருக்கு அனுப்புறான். இவன் சாதாரண ஆள் இல்ல” என்று பாராட்டினார்.
அதன்பின், “அவங்க அம்மா அப்பா இவனுக்கு திஷ்டி சுத்திப் போடணும். கண்ணேறு படாமல் பார்த்துக்கணும்” என்று நகைச்சுவையுடன் கூறியிருந்தார். அஸ்வினின் இந்த கருத்து தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.
சோஷியல் மீடியாவில் வைரல்
முன்னதாக சச்சின் டெண்டுல்கர் கூறிய பாராட்டுக்கு வைபவ் ரியாக்ட் செய்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. அந்த வரிசையில் தற்போது அஸ்வினின் இந்த பேச்சும் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இளம் வயதிலேயே இந்திய கிரிக்கெட்டின் அடுத்த பெரிய நட்சத்திரமாக வைபவ் உருவெடுத்து வருகிறார் என்ற கருத்தும் கிரிக்கெட் வட்டாரத்தில் வலுத்து வருகிறது.