அதிமுக MLA பதவியும் போச்சு... தவெக அமைச்சர் பதவிக்கும் இனி வழியில்லை! வேலுமணி அணிக்கு அதிரடியாக செக் வைத்த ஆளுநர்.!!!
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் செயல்பட்டு வரும் தவெக அரசு தற்போது புதிய அரசியல் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்து ஆதரவு அளித்த எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கும் முயற்சிக்கு ஆளுநர் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமைச்சரவை விரிவாக்கத்தைச் சுற்றி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.
தற்போது முதலமைச்சர் விஜய்யுடன் சேர்த்து 10 பேர் அமைச்சரவையில் உள்ள நிலையில், அரசின் பெரும்பான்மையை உறுதி செய்ய எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்த 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர். இதற்குப் பதிலாக தங்கள் அணிக்கு 12 அமைச்சர் பதவிகள் வேண்டும் என்று வேலுமணி தரப்பு கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் 7 இடங்களை ஒதுக்க முதலமைச்சர் விஜய் சம்மதித்திருந்ததாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகுதி நீக்க கோரிக்கையால் புதிய சிக்கல்
இதற்கிடையில், அதிமுக கொறடா உத்தரவை மீறி ஆட்சிக்கு ஆதரவு அளித்த 25 எம்.எல்.ஏ-க்களையும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் ஆளுநர் அர்லேகரிடம் மனு அளித்துள்ளனர்.
சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகவும் அவர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த மனு நிலுவையில் இருப்பதால், வேலுமணி அணியினருக்கு அமைச்சர் பதவி வழங்குவதில் ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலுமணி அணியில் அதிருப்தி
ஆளுநரின் இந்த நிலைப்பாடு வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அதிமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிகளை இழந்த நிலையில், தற்போது அமைச்சர் பதவியும் கிடைக்காமல் போகும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும், எம்.எல்.ஏ பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டால் முன்பு 18 எம்.எல்.ஏ-க்கள் சந்தித்த நிலை தங்களுக்கும் நேரிடுமோ என்ற அச்சம் அந்த அணிக்குள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிலர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அமைச்சரவை விரிவாக்கத்தில் யாருக்கு வாய்ப்பு?
இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை விரிவாக்கத்தில் மொத்தம் 20 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் வேலுமணி அணியினரை சேர்க்க ஆளுநர் மறுத்ததால், அமைச்சரவை விரிவாக்கம் பட்டியலில் தவெக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் ஐயுஎம்எல் போன்ற கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் சூழலில், தற்போதைய அரசியல் நிலையை சமாளிக்க விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளை அமைச்சரவை கூட்டணியில் இணைக்க தவெக தரப்பு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: BREAKING : ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைக்கும் திருமாவளவன்! தவெக அமைச்சரவையில் விசிக...! உற்று நோக்கும் திமுக...அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!!