அ.தி.மு.க-வில் உச்சகட்ட பரபரப்பு: இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் பொதுக்குழு வழக்கு..!

அ.தி.மு.க-வில் உச்சகட்ட பரபரப்பு: இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் பொதுக்குழு வழக்கு..!


The general body case which is going to be heard again today is the height of excitement in ADMK

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டம்  அ.தி.மு.க  ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்து தான் நடத்த முடியும் என்று கூறி  பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை உயர் நீதிமன்றம்  மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு பட்டியலிடப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நீதிபதி விசாரணை மேற்கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், கடந்த 17 ஆம் தேதி புதன்கிழமை அ.தி.மு.க வில் ஜூன் 23 அம்ம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு மற்றும்  செயற்குழுவை கூட்ட வேண்டும். தனியாக கூட்டம் நடத்தக்கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்" என்று  நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு இன்று காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில், தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும்' என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு இன்று விசாரணைக்கு வரும்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்களும் ஆஜராகி தங்களது வாதங்களை எடுத்து வைக்கவுள்ளனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.