இனி அரசியல் கட்சிகள் ரொக்கமாக அதிக அளவில் நன்கொடை பெற முடியாது... தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு..!Political parties can no longer receive large donations in cash... Election Commission control..!

அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை வாங்குவதற்கான உச்சவரம்பை குறைக்க வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் கமிஷன் யோசனை வழங்கியுள்ளது.

புதுடெல்லி, தற்போது, அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரம்வரை ரொக்கமாக நன்கொடை வாங்கலாம். அதற்கு மேல், காசோலை அல்லது மின்னணு பரிமாற்றம் மூலம் மட்டுமே நன்கொடை பெற முடியும். மேலும், ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமாக நன்கொடை வாங்கினால் அதன் விவரங்களை தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை மூலம் தெரிவிக்க வேண்டும். சில அரசியல் கட்சிகள், ரூ.20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை வாங்கவில்லை என அறிக்கை அளிக்கின்றன. ஆனால், ரூ.20 ஆயிரத்துக்கு குறைவாக ஒவ்வொருவரிடமும் ரொக்கமாக நன்கொடை வாங்கி பெரும் பணம் திரட்டி விடுகின்றனர். 

இந்த முறைகேடுகளை தடுக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் கமிஷன் யோசனை வழங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதற்கான உச்சவரம்பை ரூ.20 ஆயிரத்தில் இருந்து இரண்டாயிரமாக குறைக்குமாறு அவர் யோசனை கூறியுள்ளார். 

அப்படி குறைக்கும் பட்சத்தில், ரூ.2 ஆயிரத்துக்கு மேல் வாங்கிய அனைத்து நன்கொடை விவரங்களையும் அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்க வேண்டும். எனவே, நன்கொடை பெறுவதில் வெளிப்படைத் தன்மை ஏற்படும் என்று கருதப்படுகிறது.
மேலும், ஒரு அரசியல் கட்சி பெறும் மொத்த நன்கொடையில் 20 சதவீதமோ அல்லது ரூ.20 கோடியோ இதில் எது குறைவோ அந்த தொகைக்குள்தான் ரொக்கமாக வாங்கப்பட வேண்டும் என்றும் தலைமை தேர்தல் கமிஷனர் தெரிவித்துள்ளார். 

அரசியல் கட்சிகள் வாங்கும் நன்கொடையில் வெளிநாட்டு நன்கொடைகள் வாங்காமல் தடுக்க விவாதம் நடத்தப்பட்டு சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று அவர் யோசனை கூறியுள்ளார். அத்துடன், தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர், ஒரு நபருக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் அளிக்கும் தொகையை செக்காகவோ அல்லது மின்னணு பரிமாற்ற முறையில் மட்டுமே அளிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 

இந்த யோசனையை தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சேர்த்தால், ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலுக்காக தனி வங்கிக் கணக்கு ஆரம்பித்து, அதன் வழியாகவே வரவு, செலவு கணக்குகளை கையாள வேண்டியிருக்கும். சமீபத்தில், செயல்படாத நிலையில் இருக்கும் 284 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்தது. அதைத்தொடர்ந்து, தேர்தல் கமிஷன் மேற்கண்ட சீர்திருத்தங்களை முன்வைத்துள்ளது.