ஆற்றில் மணல் கடத்தும் உரிமை வழங்குவதற்கு நீங்கள் யார்?: தி.மு.க எம்.பிக்கு மக்கள் நீதி மய்யம் கேள்வி..!

ஆற்றில் மணல் கடத்தும் உரிமை வழங்குவதற்கு நீங்கள் யார்?: தி.மு.க எம்.பிக்கு மக்கள் நீதி மய்யம் கேள்வி..!



MNM asks DMK MP who are you to give right to transport sand in river

ஆற்று மணல் அள்ளுவதில் தி.மு.கவினரிடையே எழுந்த மோதலை சமரசம் செய்த தி.மு.க மாநிலங்களைவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளருமாகிய ராஜேஷ்குமார், கட்சிக்காரர்கள் ஆற்றில் மணல் அள்ள நான் மட்டும்தான் அனுமதி கொடுத்திருக்கிறேன். மற்ற மாவட்ட நிர்வாகிகள் பணம் பெற்றுக்கொண்டு, தனியார் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள் என்று பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனை கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கட்சிக்காரர்கள் மணல் அள்ள நான் மட்டும்தான் அனுமதி கொடுத்திருக்கிறேன். மற்றவர்கள் எல்லாம் பணம் பெற்றுக்கொண்டு, தனியார் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள் என்று நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்.பி.யுமான ராஜேஷ்குமார் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே, நதியைச் சூறையாடும் அவலத்துக்குத் துணைபோவது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மணல் கடத்தும் உரிமை ஏகபோகமாக ஆளுங்கட்சியினருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகத்தையும் இச்சம்பவம் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

இயற்கை வளங்களைப் பாதுகாக்க, சட்டவிரோதமாக மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முறையாக டெண்டர் விடப்பட்டு, குறிப்பிட்ட அளவுக்குத்தான் மணல் அள்ள அனுமதிக்கப்படுகிறது. இச்சூழலில், மணல் அள்ள கட்சிக்காரர்களுக்கு அனுமதி வழங்கியதாக திமுக எம்.பி. பேசியது யார் கொடுத்த தைரியத்தில்?.

எனவே, இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதுடன், மணல் கொள்ளையை முற்றிலும் தடுத்து நிறுத்தி, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.