இடைத்தேர்தலில் இந்த பேச்சுக்கே இடமில்லை! சீமான் தலையில் இடியை இறக்கிய ஜெயக்குமார்..! பரபரப்பில் அரசியல் களம்...!!!
தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற யோசனையை அதிமுக ஏற்கவில்லை என முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தனித்துப் போட்டியிட்டு அரசியல் சவால்களைச் சமாளிக்கும் வலிமை கொண்ட கட்சி என்றும் கூறியுள்ளார். இதனால் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலைச் சுற்றியுள்ள அரசியல் விவாதம் மேலும் சூடுபிடித்துள்ளது.
பொது வேட்பாளர் யோசனைக்கு அதிமுக மறுப்பு
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், அதிகரிக்கும் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவை குறித்தும் ஜெயக்குமார் பேசினார். இந்த விவகாரங்களுக்கு முதல்வர் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: சீமானுக்கு ஸ்டாலின் சொன்ன சூசகமான பதில்! அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் காத்திருக்கும் பெரிய ட்விஸ்ட்....!!!
இதற்கிடையே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறுவதைத் தடுக்க பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதேபோல், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தன்னை வேட்பாளராக அறிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக மற்றும் திமுக ஆதரவு அளித்தால் பொது வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அம்பாசமுத்திரத்தில் தனித்துப் போட்டியிட கட்சிகள் திட்டமா?
ஆனால், பொது வேட்பாளர் என்ற முடிவை அதிமுக நிராகரித்துள்ளதால் சீமானின் எதிர்பார்ப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றிருந்ததால், மீண்டும் அங்கு நேரடியாகக் களமிறங்கி வெற்றி பெற முடியும் என அக்கட்சி கருதுதுகின்றன.
அதே நேரத்தில், கடந்த தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்த காங்கிரஸ் தற்போது தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில், அந்தத் தொகுதியில் திமுகவும் நேரடியாகப் போட்டியிட விரும்புவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்பட்ட தொகுதி என்பதும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
தவெகவின் விமர்சனத்தைத் தவிர்க்கும் கணக்கா?
திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே வேட்பாளரை ஆதரித்தால், இரு கட்சிகளும் மறைமுகக் கூட்டணி அமைத்துள்ளதாக தவெக விமர்சிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால், பொது வேட்பாளர் திட்டத்தைத் தவிர்த்து இரு பிரதான கட்சிகளும் தனித்தனியாகக் களமிறங்கவே விரும்புவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இடைத்தேர்தல் தேதி மற்றும் வேட்பாளர் தொடர்பான இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகே அம்பாசமுத்திரத்தின் அரசியல் களம் தெளிவாகும்.