அரசியல்

பா.ஜ.க-வுக்கு தாவிய காங்கிரஸ் செயல் தலைவர்: குஜராத்தில் கரைய காத்திருக்கும் காங்கிரஸ்..!

Summary:

காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க-வுக்கு தாவிய காங்கிரஸ் செயல் தலைவர்: குஜராத்தில் கரைய காத்திருக்கும் காங்கிரஸ்..!

விரைவில் குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியில்  இருந்து வெளியேறிய ஹர்திக் படேல் பா.ஜ.க-வில் இணைந்துள்ளார். 

குஜராத் சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைய உள்ள நிலையில்,  குஜராத் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க முழுமூச்சில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைமையின் செயல்பாடுகள் மீது அதிருப்தியில் இருந்த அக்கட்சியின் குஜராத் மாநில செயல்தலைவர் ஹர்திக் படேல் கடந்த மே மாதம் 19ம் தேதி அன்று தனது பொறுப்பில் இருந்து திடீரென விலகினார்.

இந்த நிலையில், ஹர்திக் படேல் இன்று குஜராத் மாநில பா.ஜ.க தலைவர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பா.ஜ.க-வில் இணைவதற்கு முன்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,  ‘’தேச நலன், பொதுநலன், மாநில நலன் ஆகிய உணர்வுகளுடன் இன்று முதல் புதிய அத்தியாயத்தினை தொடங்குகின்றேன்.

வெற்றிகரமான பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தேசத்தின் உன்னத பணிக்கு ஒரு சிறிய சிப்பாயாக செயல்படுவேன்” என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் மீதம் இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க-வில் இணைக்கும் நிகழ்ச்சியை பத்து நாட்களுக்கு ஒருமுறை செய்வோம் என்றும்  ஹர்திக் படேல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement