தேவர் ஜெயந்தி விழா: தங்க கவத்திற்காக அ.தி.மு.கவில் மீண்டும் மோதல்!.. கோதாவில் குதித்த ஓ.பி.எஸ்..!

தேவர் ஜெயந்தி விழா: தங்க கவத்திற்காக அ.தி.மு.கவில் மீண்டும் மோதல்!.. கோதாவில் குதித்த ஓ.பி.எஸ்..!



Devar Jayanti Festival: Clashes again in ADMK over Golden Gate

கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க  பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கட்சியின் 2600 க்கும் மேற்பட்ட பொதுக்குழுவினர் ஆதரவுடன் அவர் இந்த பொறுப்புக்கு தேர்வானதாக கூறப்பட்டிருந்தது.

பொதுக்குழு நடந்த அதே நேரத்தில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு  இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. பின்னர் உயர் நீதிமன்ற  உத்தரவின்படி அந்த 'சீல்' அகற்றப்பட்டு, சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் பின்னர் பொதுக்குழுவிற்கு எதிராக நடைபெற்ற வழக்கில் தனி நீதிபதி ஓ.பி.எஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்புக்கு எதிரான ஈ.பி.எஸ் தரப்பின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதனையடுத்து பொதுக்குழுவில் நிறைவேறப்பட்ட தீர்மானங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார்.

இந்த நிலையில், வருகிற 28 ஆம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜை விழா தொடங்க உள்ளது. இதற்காக வருகிற 25 ஆம் தேதி மதுரையிலுள்ள வங்கியில் வைக்கப்பட்டுள்ள தங்க கவசத்தை அ.தி.மு.க சார்பில் முறைப்படி பெற்று விழா கமிட்டியிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் தங்க கவசத்தை பெறுவதில் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்திற்கும், தற்போதைய பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசனுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

இருவருமே தங்கள் வசம் தங்க கவசத்தை ஒப்படைக்குமாறு வங்கியில் மனு அளித்துள்ளனர். இதற்கிடையே கவசத்தை யார் கையில் ஒப்படைப்பது?என்பது குறித்து வங்கி அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அ.தி.மு. க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைப்பதா? அல்லது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வம் வசமே ஒப்படைப்பதா? என்ற குழப்பத்தில் வங்கி அதிகாரிகள் இருப்பதாக கூறப்படுகிறது.