அ.தி.மு.க பொதுக்குழு அப்டேட்: அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு; பொதுக்குழு மீண்டும் ஜீலை 11 ஆம் தேதி கூடும்..!

அ.தி.மு.க பொதுக்குழு அப்டேட்: அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு; பொதுக்குழு மீண்டும் ஜீலை 11 ஆம் தேதி கூடும்..!



aiadmk-general-committee-update-2

அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்த அ.தி.மு.க பொதுக்குழு மீண்டும் அடுத்த மாதம் 11 ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, அ.தி.மு.க-வில் ஒற்றை தலைமை குறித்த விவாதம் தொடங்கியதில் இருந்தே உட்கட்சி பூசலும் வெடித்தது. இந்த நிலையில், அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் இன்று நடைபெறுகின்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னை மற்றும் வெளியூகளில் இருந்து வாகனங்கள் மூலம் வானகரத்தில் குவிந்தனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டதில் கலந்து கொள்ள போலி அடையாள அட்டைகளுடன் பலர் வந்துள்ளதாக பரபரப்பு எழுந்தது. இதற்கிடையே ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் பொதுக்குழு நடைபெற்ற மண்டபத்தை வந்தடைந்தனர்.

எடுத்த எடுப்பிலேயே, 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள கோரிக்கை விண்ணப்பத்தினை வாசித்தார் சி.வி.சண்முகம். 23 தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது என்று 3 முறை கூறினார்.

இரட்டை தலைமையால் கடுமையாக திமுகவை எதிர்த்து செயல்பட முடியாமல் உள்ளது. இரட்டைத்தலைமையால் ஒருங்கிணைப்பு இல்லாத செயல்பாட்டால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். நூறாண்டு காலம் அ.தி.மு.க நீடிக்க எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஒற்றைத்தலைமை எற்படுத்த வேண்டும் . இப்பொதுக்குழுவில் இரட்டைத்தலைமையை ரத்து செய்து, ஒற்றைத்தலைமை தேவை என வலியுறுத்தி கோரிக்கை விடப்படுகிறது. இப்பொதுக்குழுவில் அடுத்த பொதுக்குழுவிற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்று சி.வி.சண்முகம் பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை வாசித்தார்.

இதன் பின்னர், பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 11.7.22 அன்று காலை 9.15 அடுத்த பொதுக்குழு கூடுவதாக அ.தி.மு.க அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.